மாவட்ட செய்திகள்

ஓய்வுபெற்ற பாய்லர் ஆலை ஊழியர்கள் வீட்டில் நகை- வெள்ளி பொருட்கள் திருட்டு + "||" + Retired boiler Home staff of the plant Jewelry silverware theft

ஓய்வுபெற்ற பாய்லர் ஆலை ஊழியர்கள் வீட்டில் நகை- வெள்ளி பொருட்கள் திருட்டு

ஓய்வுபெற்ற பாய்லர் ஆலை ஊழியர்கள் வீட்டில் நகை- வெள்ளி பொருட்கள் திருட்டு
திருவெறும்பூரில் நீண்ட நாட்களாக பூட்டியிருந்ததை நோட்டமிட்டு, ஓய்வுபெற்ற பாய்லர் ஆலை ஊழியர்களின் வீடுகளில் 15 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
திருவெறும்பூர்,

திருவெறும்பூர் மலைக்கோவில் தெற்கு பகுதியில் உள்ள தென்றல் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது 62). பாய்லர் ஆலையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவர் வீட்டை பூட்டிவிட்டு, தனது உறவினர்களை பார்ப்பதற்காக 15 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் கோயம்புத்தூர் சென்று விட்டார்.


இவருடைய வீடு அருகே குடியிருப்பவர் ஆறுமுகம்(61). இவரும் பாய்லர் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் தனது மகள் பிரசவத்திற்காக வீட்டை பூட்டி விட்டு 10 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னை சென்று விட்டார்.

இந்நிலையில் இவர்களுடைய வீடுகளுக்கு நடுவில் உள்ள வீட்டில் வசிப்பவர் நேற்று காலை வெளியே வந்து பார்த்தபோது, பொன்னுசாமி மற்றும் ஆறுமுகம் ஆகியோருடைய வீடுகளின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் மதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வீடுகளை பார்வையிட்டனர். பின்னர் போலீசார் செல்போன் மூலம் கோவையில் இருந்த பொன்னுசாமிக்கு தகவல் தெரிவித்து, அவருடைய வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் ஏதேனும் விலை உயர்ந்த பொருட்கள் இருந்ததா? என்றும் கேட்டனர். அதற்கு அவர், பீரோவில் தங்க நகைகள் வைத்திருந்ததாகவும், மீதி பொருட்கள் பற்றி தனது மனைவிக்குத்தான் தெரியும் என்று கூறியதோடு, உடனடியாக மனைவியுடன் புறப்பட்டு திருவெறும்பூர் வருவதாக கூறினார்.

மேலும் ஆறுமுகத்திடம் போலீசார் செல்போனில் பேசியபோது, அவர் தன் வீட்டில் மடிக்கணினி மற்றும் பொருட்கள் வைத்து இருந்ததாக கூறியதோடு, உடனடியாக ஊருக்கு வருவதாக கூறினார். இதனை தொடர்ந்து போலீசார், இந்த திருட்டு சம்பவம் குறித்து அக்கம், பக்கத்தினரிடம் விசாரித்தனர். மேலும், நீண்ட நாட்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் நிலை வந்தால் போலீசாரிடம் தகவல் தெரிவித்து விட்டு செல்லும் படி அறிவுரை கூறினர்.

இந்த திருட்டு சம்பவத்தில், நீண்ட நாட்களாக பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடும் மர்ம நபர்கள் ஈடுபட்டு இருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் நேற்று இரவு பொன்னுசாமி மனைவியுடன் தனது வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. ஆறுமுகமும் அவருடைய வீட்டிற்கு வந்து பார்த்தபோது, 2 வெள்ளி டம்ளர்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்த புகார்களின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.