காமராஜர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க விருதுநகர் வரும் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்


காமராஜர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க விருதுநகர் வரும் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்
x
தினத்தந்தி 13 July 2018 10:45 PM GMT (Updated: 13 July 2018 8:53 PM GMT)

காமராஜர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க விருதுநகருக்கு வரும் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

சிவகாசி,

பெருந்தலைவர் காமராஜர் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு, நாடார் மகாஜன சங்கம் சார்பாக கல்வித் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) விருதுநகரில் நடைபெறுகிறது. விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காமராஜர் இல்லத்தில் இருந்து கல்வி கலாசார ஊர்வலம் மற்றும் திருவிளக்கு ஏற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.

இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, காமராஜர் உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். விருதுநகர் மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலை வகித்து பேசுகிறார். முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், காந்தி பேரவை நிறுவனர் குமரி ஆனந்தன், தமிழக தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கப்படுகின்றது.


தொடர்ந்து விருதுநகர் நாடார் மகமை கமிட்டி உள்பட 4 கல்வி நிர்வாகத்துக்கு கல்வி சேவை விருதும், 4 மருத்துவமனை நிர்வாகத்திற்கு மருத்துவ சேவை விருதும் வழங்கி கல்வி திருவிழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உரையாற்றுகின்றார். முன்னதாக நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் வரவேற்புரையாற்றுகின்றார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, மாபா பாண்டியராஜன், டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபாமுத்தையா கலந்து கொண்டு பேசுகின்றனர்.

தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் காமராஜர் நூற்றாண்டு விழா மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். முன்னதாக விருதுநகர் வருகை தரும் முதல்-அமைச்சருக்கு, மாவட்ட அ.தி.மு.க. சார்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க மாவட்ட கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலும் உள்ள மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

Next Story