மாவட்ட செய்திகள்

செங்குன்றம் அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள மரகத சிலை-வெள்ளி வேல் திருட்டு + "||" + Near the vertical Worth Rs 2 crore Statue of emerald Silver whale theft

செங்குன்றம் அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள மரகத சிலை-வெள்ளி வேல் திருட்டு

செங்குன்றம் அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள மரகத சிலை-வெள்ளி வேல் திருட்டு
செங்குன்றம் அருகே, முருகன் கோவிலில் ரூ.2 கோடி மதிப்புள்ள மரகத முருகன் சிலை மற்றும் வெள்ளி வேலை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த பழைய அலமாதியில், செங்குன்றம்-திருவள்ளூர் சாலையோரமாக தங்கவேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவகுமார் நிர்வகித்து வருகிறார்.

கிருத்திகை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.


நேற்று காலை வழக்கம் போல் கோவில் நிர்வாகி சிவகுமார், கோவிலை திறந்து பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார். பின்னர் குளிப்பதற்காக அவர், கோவில் அருகே உள்ள குளியல் அறைக்கு சென்றார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, கோவில் கருவறையில் முருகன் சிலைக்கு அருகே வைத்திருந்த சுமார் 1 அடி உயரம் உள்ள மரகத முருகன் சிலை மற்றும் அதன் அருகே வைத்து இருந்த 1 அடி உயர வெள்ளி வேல் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர், சோழவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி, பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதுபற்றி கோவில் நிர்வாகி சிவகுமார் கூறும்போது, “நேற்று முன்தினம் இரவு அமாவாசை என்பதால் சிறப்பு பூஜைகள் செய்வதற்காக கருவறையில் இருந்த மரகத முருகன் சிலையை வெள்ளித் தட்டில் வைத்து, அதனுடன் வெள்ளி வேலையும் வைத்து பூஜைகள் செய்தோம். பூஜைகள் முடிந்த பின்பு மரகத சிலை, வெள்ளி வேலை கோவில் கருவறையில் உள்ள முருகன் சிலைக்கு அருகே வைத்து விட்டு கோவிலை பூட்டி சென்றேன். நேற்று காலை கோவிலை திறந்து பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்தேன். பின்னர் குளியல் அறைக்கு சென்று குளித்து விட்டு வந்து பார்த்தபோது மரகத சிலை, வெள்ளிவேல் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தேன்” என்றார்.

திருட்டு போன மரகத முருகன் சிலையின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு போன மரகத முருகன் சிலை மற்றும் வெள்ளி வேலையும், அதை திருடிச் சென்றவர்களையும் தேடி வருகின்றனர்.