தி.மு.க. பிரமுகர்-மனைவிக்கு அரிவாள் வெட்டு


தி.மு.க. பிரமுகர்-மனைவிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 14 July 2018 4:06 AM IST (Updated: 14 July 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

செம்பட்டி அருகே தி.மு.க. பிரமுகர்-மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்ற முகமூடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செம்பட்டி,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

செம்பட்டி அருகே உள்ள எஸ்.பாறைப்பட்டியை சேர்ந்தவர் மாயப்பன் (வயது 50). இவர் தி.மு.க. ஊராட்சி அவைத்தலைவராக உள்ளார். அவருடைய மனைவி பேச்சியம்மாள் (45). இவர்களுக்கு சசிக்குமார் (14) என்ற மகனும், சிவசந்தியா (13) என்ற மகளும் உள்ளனர்.

வீரக்கல் ரோடு சந்திப்பு அருகே தோட்டத்து வீட்டில் மாயப்பன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் சிறுநீர் கழிப்பதற்காக மாயப்பன் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது வீட்டின் முன்பு முகமூடி அணிந்தபடி கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 5 பேர் நின்று கொண்டிருந்தனர்.

இதைக்கண்ட மாயப்பன் நீங்கள் யார்? என்று கேட்டுள்ளார். அப்போது மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்டினர். இதில் அவருடைய தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அவர் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு மனைவி பேச்சியம்மாள் வெளியே வந்து பார்த்தார். அப்போது அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கணவன், மனைவி சத்தம் போட்டனர்.இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து படுகாயங்களுடன் தவித்த மாயப்பனையும், பேச்சியம்மாளையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொள்ளையடிப்பதற்காக மூகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் கணவன், மனைவியை பார்த்தவுடன் அரிவாளால் அவர்களை வெட்டிவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாயப்பன், பேச்சியம்மாள் ஆகியோரை முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளருமான இ.பெரியசாமி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் பாறைப்பட்டி ஊராட்சி செயலாளர் வாஞ்சிநாதன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். 

Next Story