வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கொடைக்கானல்,
கொடைக்கானலில் நடைபெற்று வரும் மருத்துவ கருத்தரங்கில் கலந்து கொள்ள நேற்று வருகை தந்த தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக தொண்டர்களை தயார்படுத்தி வருகிறோம். கட்சியின் தலைவர் அமித்ஷாவின் உத்தரவின்படி 20 சட்டமன்ற பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர்.
தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இணைந்து செயல்பட்ட தி.மு.க. எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசு கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான திட்டத்தினை குறை கூறுவதிலேயே குறியாக உள்ளனர். மோடி பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார்கள். தலைப்பு செய்தியாக வருபவர்கள் தலைவராக வர முடியாது. மக்கள் தெளிவாக உள்ளனர். ‘நீட்’ தேர்வு வேண்டாம் என்று கூறிய நிலையில் இன்று தமிழில் பலர் தேர்வு எழுதியதில் துப்புரவு தொழிலாளரின் குழந்தை கூட தேர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் இத்தேர்வில் தவறான கேள்விகளை கொடுத்திருக்க கூடாது. இதில் அதிகாரிகள் கவனமாக இருந்திருக்க வேண்டும்.
உலக அளவில் பொருளாதாரத்தில் பல நாடுகளை பின்னுக்குத்தள்ளி இந்தியா 6-வது இடத்தினை பிடித்து சாதனை புரிந்துள்ளது. மோடியை குறை சொல்பவர்கள் உலக அளவில் பெயர் கிடைத்தாலும் பாராட்டுவது இல்லை. தமிழகத்தில் பல திட்டங்கள் பாராட்டப்பட்டாலும் சில திட்டங்களை எச்சரிக்கையாக கையாளவேண்டும். பேரிடர் மேலாண்மை பயிற்சி மேற்கொண்ட லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தது ஒப்புக் கொள்ளக் கூடியதாக இல்லை. இதற்கு கல்லூரி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் நடத்தப்பட்ட இந்த பயிற்சி குறித்து விசாரிக்க வேண்டும்.
தமிழகத்தில் கூட்டணி குறித்து கவலைப்படவில்லை. இருப்பினும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கூட்டணி குறித்து பேசப்படும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் நன்றாக உள்ளனர். பிரதமரை பலர் சாடுகின்றனர். நாட்டில் 32 கோடி பேர் ஜன் தன் வங்கி திட்டத்தினை தொடங்கியுள்ளனர். 5 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 50 கோடி பேருக்கு காப்பீடு (ஹெல்த் இன்சூரன்சு) செய்யப்பட்டுள்ளது.
அமாவாசை அன்று கட்சியினை தொடங்கி, கொடியேற்றுபவர்கள் குறித்து விமர்சனம் செய்வது எங்களது உரிமை. பிரச்சினை வரும் போது ஊரை விட்டு ஓடி விட்டு தற்போது எங்களுக்கு விமர்சனம் செய்ய உரிமையில்லை என்கின்றனர். இது சினிமா விமர்சனம் இல்லை. அரசியல் விமர்சனம். தமிழகத்தில் பிரிவினைவாத கருத்துக்கள் கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பா.ஜ.க.மாவட்ட பொதுச்செயலாளர் கனகராஜ், மாவட்ட செயலாளர் ரஞ்சித், பழனி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பிரபு, ஒன்றிய தலைவர் ஜோதிபாசு, நகர முன்னாள் தலைவர் மணி, நிர்வாகி கணேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story