வாக்குச்சாவடிகள் 2 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


வாக்குச்சாவடிகள் 2 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 13 July 2018 11:30 PM GMT (Updated: 13 July 2018 10:50 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 2 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கடந்த 2-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 3,454 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வரைவு வாக்குச்சாவடிகள் குறித்து கோரிக்கைகள் இருந்தால் 10-ந் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் மனுவாக கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளிலும் இருந்து 21 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றது. இதில் 17 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. ஒரு மனு வார்டு வரையறை தொடர்புடைய காரணத்தால் நடவடிக்கை எடுக்க ஊரக வளர்ச்சித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட வரைவு வாக்குச்சாவடிகள் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கருத்துக்கேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராமன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

அனைத்து தாசில்தார்களும், மண்டல அலுவலர்களுடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். வாக்குச்சாவடி மைய கட்டிடம் பழைய கட்டிடமாக இருந்தால் மையத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மையத்தில் அதிகபட்சமாக 1,400 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் தான் வாக்குச்சாவடி மையத்தை பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்குச்சாவடிகள் 2 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கவேண்டும். வாக்காளர்கள் வாக்களிக்க 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் செல்லாமல் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சியினரும் குறைகள் தெரிவிக்காத வகையில் வாக்குச்சாவடி மையத்தை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வேலூர் உதவி கலெக்டர் மேகராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் நாராயணன் (தேர்தல்), சண்முகநாதன் (பொது), தேர்தல் தாசில்தார் சச்சிதானந்தம், அனைத்து தாசில்தார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story