கோவையில் ‘அக்ரி இன்டெக்ஸ்’ விவசாய கண்காட்சி


கோவையில் ‘அக்ரி இன்டெக்ஸ்’ விவசாய கண்காட்சி
x
தினத்தந்தி 13 July 2018 11:01 PM GMT (Updated: 13 July 2018 11:01 PM GMT)

கோவையில் ‘அக்ரி இன்டெக்ஸ்’ என்ற விவசாய கண்காட்சியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை,

கோவை கொடிசியாவில் ‘அக்ரி இன்டெக்ஸ்-2018’ என்ற விவசாய கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை நடக்கிறது. கண்காட்சி தொடக்க விழா நேற்று காலையில் நடந்தது. தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஓ.கே.செல்வராஜ், சி.மகேந்திரன், கோவை வேளாண் பல்கலைக் கழக துணைவேந்தர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழக வேளாண்துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு கலந்து கொண்டு பேசினார். கண்காட்சி யை தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கண்காட்சி மலரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆசியுடன், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறார்கள். விவசாயிகளின் நலனுக்காக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டு வருகின்றன.

ஆனைமலை-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதி விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது. இந்த திட்டத்தை நிறைவேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எனவே இந்த திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப் படும்.

அதுபோன்று அத்திக்கடவு-அவினாசி திட்டம் விவசாயிகளின் 70 ஆண்டுகால கனவு ஆகும். இந்த திட்டத்தையும் நிறைவேற்ற முதற் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டமும் கண்டிப்பாக விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த நெல் சாகுபடி செய்யும் நவீன எந்திரங்கள், களை எடுக்கும் கருவிகள், சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கான கருவிகளை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, துரைக்கண்ணு ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், கனகராஜ் மற்றும் கொடிசியா நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story