வங்கியில் தீப்பிடித்து கணினி, ஆவணங்கள் எரிந்து நாசம்


வங்கியில் தீப்பிடித்து கணினி, ஆவணங்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 13 July 2018 11:21 PM GMT (Updated: 13 July 2018 11:21 PM GMT)

சூலூரில் வங்கியில் தீப்பிடித்தது. இதில் அங்கிருந்த கணினி, ஆவணங்கள் எரிந்து நாசம் ஆனது.

சூலூர்,

இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-

கோவையை அடுத்த சூலூர் திருச்சி ரோட்டில் ஒரு வாடகை கட்டிடத்தின் கீழ் தளத்தில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இதன் அருகிலேயே கட்டிட உரிமையாளர் சசிக்குமார் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் வங்கியில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கட்டிட உரிமையாளர் சசிக்குமார் சூலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே சூலூர் தீயணைப்பு அதிகாரி கணேசன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையில் வங்கி கட்டிடத்துக்குள் தீப்பிடித்து மளமளவென பற்றி எரிந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் வங்கிக்குள் சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் வங்கி பூட்டப்பட்டு இருந்ததால் உள்ளே செல்ல முடிய வில்லை.

இதையடுத்து சூலூர் போலீசாரின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கணினி அறை தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. எனவே தீயணைப்பு வீரர்கள் கரியமிலவாயுவை செலுத்தி 10 நிமிடங்களில் தீயை அணைத் தனர்.

இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. வங்கி லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகள் தப்பின. ஆனாலும் தீ விபத்தில் வங்கியில் இருந்த கணினி, ஏ.சி. மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. தீப்பிடித்த போது மின்சார ஒயர்களும் எரிந்தன.

இது குறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், கணினி அறையில் 24 மணி நேரமும் ஏ.சி. இயக் கப்பட்டு வருகிறது. அதில் மின் கசிவு ஏற்பட்டதால் தீப்பிடித்து இருக்கலாம் என்று கருதுகிறோம் என்றனர். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வங்கி மேலாளர் உமா சங்கரி கூறுகையில், வங்கியின் கணினி அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கியில் உள்ள நகை, பணம் உள்ளிட்டவைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை என்றார். 

Next Story