அரசுக்கு சொந்தமான பனைமரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்த முயற்சி


அரசுக்கு சொந்தமான பனைமரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்த முயற்சி
x
தினத்தந்தி 13 July 2018 11:22 PM GMT (Updated: 13 July 2018 11:22 PM GMT)

பேராவூரணி அருகே அரசுக்கு சொந்தமான பனைமரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்த முயற்சி செய்தனர்.

பேராவூரணி,

பேராவூரணி அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாயில் இருந்த அரசுக்கு சொந்தமான பனைமரங்களை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்த முயன்றனர். சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் சென்றபோது அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே கழனிவாசல் கிராமத்தில் கண்மாய் உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கண்மாய் மூலம் கழனிவாசல் மற்றும் ஆதனூர் பகுதியில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கண்மாய் பகுதியையொட்டி ஏராளமான பனைமரங்கள் உள்ளன. இந்த பனை மரங்களை இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் வெட்டி கடத்துவதாக பேராவூரணி வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பேராவூரணி தாசில்தார் பாஸ்கரன், பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் செல்வராஜ், உதவி என்ஜினீயர் பிரசன்னா மற்றும் வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் கழனிவாசல் கண்மாய் பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற மர்ம நபர்கள் அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்து தப்பியோடினர்.

அங்கு இருந்த 28-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டப்பட்டு துண்டுகளாக கிடந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் பேராவூரணி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் பனை மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story