காய்கறி விலை கிடுகிடு உயர்வு சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனை
கோவையில் வரத்து குறைந்ததால் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோவை,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் விவசாய தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் காய்கறி பயிர்கள் அழுகும் நிலை உள்ளது. இதனால் காய்கறிகளின் உற்பத்தி குறைந்து கோவை மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்தது.
இதன் காரணமாக கோவையில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் கடந்த மாதம் காய்கறி விற்கப்பட்ட விலை மற்றும் நேற்று விற்பனையான காய்கறிகளின் விலை (ஒரு கிலோவுக்கு) விவரம் வருமாறு:-
ரூ.27-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் ரூ.50, ரூ.22-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் ரூ.40, ரூ.24-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் ரூ.34, ரூ.25-க்கு விற்கப்பட்ட பாகற்காய் ரூ.30, ரூ.26-க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கு ரூ.30, ரூ.30-க்கு விற்கப்பட்ட பீட்ரூட் ரூ.40, ரூ.14-க்கு விற்கப்பட்ட ஆப்பிள் தக்காளி ரூ.20, ரூ.40-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் கடை நடத்தி வரும் விவசாயி ஒருவர் கூறியதாவது:-
மழை இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு, காய்கறிகளின் விலை உயர்வது வழக்கம். கோவையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிக அளவு பெய்துள்ளது. இதனால் தொண்டாமுத்தூர், பேரூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்கறி தோட்டங்களில் மழைநீர் தேங்கி நிற் கின்றன. இதனால் பயிர்கள் அழுகும் நிலை உள்ளது. இதன் காரணமாக காய்கறி வரத்து குறைந்து விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இனி வரும் வாரங்களில் காய்கறி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story