தெர்மாக்கோல் மீதான தடையை தளர்த்த ஐகோர்ட்டு மறுப்பு


தெர்மாக்கோல் மீதான தடையை தளர்த்த ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 13 July 2018 11:48 PM GMT (Updated: 13 July 2018 11:48 PM GMT)

விநாயகர் சதுர்த்திக்காக தெர்மாக்கோல் மீதான தடையை தளர்த்த கோரும் மனுவை ஐகோர்ட்டு நிராகரித்து உத்தரவிட்டது.

மும்பை,

மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு, விற்பனை என அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் தடை விதித்து கடந்த மார்ச் மாதம் அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கும், அப்புறப்படுத்தவும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த கால அவகாசம் கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.

இதைத்தொடர்ந்து மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலுக்கு வந்தது. தடையை மீறுபவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி வர இருப்பதால், கணபதி பந்தல் மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிப்பில் தெர்மாக்கோல் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அனுமதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் தெர்மாக்கோல் மீதான தடையை தளர்த்துமாறு கோரிக்கை விடுத்து தெர்மாக்கோல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை தாங்களே அப்புறப்படுத்தி விடுவதாகவும் தெர்மாக்கோல் உற்பத்தியாளர்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா மற்றும் ரியாஸ் சாக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தெர்மாக்கோல் உற்பத்தியாளர்கள் தாக்கல் செய்த மனுவில், வருகிற விநாயகர் சதுர்த்தியின்போது தெர்மாக்கோலின் மீதான தடை தளர்த்தப்படாவிட்டால் பல்வேறு வியாபாரிகள் பொருளாதார ரீதியிலாக பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என கூறப்பட்டு இருந்தது.

ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசு வக்கீல், பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யவும், அப்புறப்படுத்தவும் ஏற்கனவே 3 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் வியாபாரிகள் இதனை பொருட்படுத்தாமல் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை தக்கவைத்துக் கொண்டு தற்போது விதிகளை தளர்த்த கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசு தரப்பு நியாயத்தை புறந்தள்ள முடியாது என கூறினர்.

பின்னர் விநாயகர் சதுர்த்திக்காக தெர்மாக்கோல் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை தளர்த்த முடியாது என உத்தரவிட்டனர். 

Next Story