மனிதநேயம் மலர மன மாற்றம் தேவை


மனிதநேயம் மலர மன மாற்றம் தேவை
x

இன்றைய யுகம் அறிவியல் யுகம். உட்கார்ந்த இடத்தில் உலகையே உள்ளங்கையில் வைத்துப் பார்க்கலாம். காலம் சுருங்கிவிட்டது. காலம் சுருங்கச் சுருங்க மனித மனங்களும் இன்று சுருங்கிக் கொண்டு இருக்கின்றன.

பிழை பொறுத்தல், விட்டுக் கொடுத்தல், பிறர் துயரில் பங்கெடுத்தல், நேர்மை போற்றல், பொது நலம் பேணுதல், இல்லற மாண்பு, குடும்ப நலம் பேணுதல், நற்பழக்க வழக்கம், மூத்தோரை மதித்தல், ஆலோசனை கேட்டல் போன்ற பண்புகள் மனிதர்களிடம் இருந்து இன்று எங்கே போயின? எல்லோரிடமும் இருந்த இப்பண்புகள் கானல் நீர் போல மறைந்து வருவது வேதனைக்குரியதாகும்.

மனித நேயத்தை நம்மிடம் தேடாமல், யாரோ ஒருவரின் மனிதநேயச் செயலைத் தொலைக் காட்சியில் கண்டு மெய்சிலிர்த்துக் கொண்டு இருக்கின்றோம்.

இது தான் இன்றைய நிலை. குழந்தை பிறக்கும் போது வெற்று மனமாய் பிறக்கின்றது. இதற்கு நல்லதும் தெரியாது. கெட்டதும் தெரியாது. புறச்சூழல் தான் குழந்தை மனதுக்கு கற்பிக்கின்றது. தாய், தந்தை, உறவினர்கள், ஆசிரியர்கள், தோழர்கள் போன்றோரால்தான் நற்பண்புகளும், தீய பண்புகளும் குழந்தைகளின் மனதில் விதைக்கப்படுகின்றன.

கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் கற்பிக்கப்பட்ட ஒழுக்கக் கட்டுப்பாடுகள் தனிக்குடும்பமாகப் பிரிந்ததால் தளர்ந்தன. கட்டுப்பாடுகள் தளர்ந்ததால் குழந்தைகள் மனங்கள் மாற்றங்களின்பாற் செல்லலாயிற்று.

நீதி நூல்கள் படிப்பதும், நீதிக் கதைகள் சொல்வதும், பழமொழிகள் மூலம் ஒழுக்க நெறி பகர்தலும், இறைபக்தியில் திளைத்தலும் அருகிவிட்டது. அலைபேசி, இணையம், திரைப்படங்கள் ஆகியவற்றின் பயன்பாடு பெருகிவிட்டது. குழந்தைகள் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்தட்டுமே! என்று ஆரம்பத்தில் விளையாட்டுக்காகக் கொடுக்கப்பட்ட அலைபேசி தான் பெரும்வினையாய்ப் போய் குழந்தை மனத்தைக் கெடுக்கின்றது.

திரைப்படங்கள் சில கல்விக் கூடங்களைக் காமெடிக் கூடங்களாகவும், காதல் கூடங்களாகவும், ஒழுக்கக்கேடான செய்திகளையும் காட்டி, குழந்தைகளின் மனங்களில் தீயமாற்றத்தினை ஏற்படுத்திவிட்டன. மனஅமிழ்தத்தில் நஞ்சு கலந்துவிட்டது. ஒழுக்கம் உயர்வு தரும் என்பது போய், ஒழுக்கமின்மையே உயர்வு தரும் என்று எண்ணக் கூடிய அளவில் மனங்கள் மாறிவிட்டன.

கல்வி கற்க வேண்டிய வயதில், புகைப்பதும், மது அருந்துவதும், போதைக்கு அடிமையாவதும், ஆபாசப் படங்களைப் பார்ப்பதும், கூடாப் பழக்க வழக்கங்களில் ஈடுபடுவதும் இன்று பல்கிப்பெருகிவிட்டது. இது வேதனைக்குரியது. இதற்கு காரணம் யார்? குடும்பச் சூழல், நண்பர்கள் குழாம், சில திரைப்படங்கள் ஆகியவை தான்.

சமூகக் கட்டுப்பாடுகள் தளர்ந்ததே, மனங்கள் கட்டவிழ்ந்துவிடக் காரணம். தீயப் பண்புகள் மனங்களில் பெருகியதால், சமூகக் குற்றங்கள் பெருகிய வண்ணமே உள்ளன. வீண்வம்புக்குச் செல்வதும், சண்டையிடுவதும், தன்னைக் கதாநாயகனாக கற்பனை செய்வதும் இன்றைய சில இளைய மனங்களில் குடிபுகுந்தவையாகும்.

பொறுமை என்பது இல்லாமல் சிறிய வாய்த்தகராறு, கைகலப்பாக மாறி, கொலையில் முடிந்துபோவதை காணமுடிகிறது. இவற்றுக்கு காரணம் மனம் குப்பைக் கூளமாக மாறிப்போனதுதான்.

இளம்வயதில் இருந்தே நீதிக் கதைகளையும், நீதி போதனைகளையும், பக்தி நெறியையும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இது பெற்றோரிடம் இருந்து தான் தொடங்க வேண்டும். பணம் சம்பாதித்து குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே பெற்றோர்கள் மேற்குறித்தவற்றைத் தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்காமல் தங்கள் வேலையிலேயே பெரிதும் ஈடுபடுகிறார்கள்.

பள்ளியில் நீதிபோதனைகளைக் கற்றுக்கொள்ளட்டும் என்று பெற்றோர் எண்ணுவது தவறு. பெற்றோரே முதல் ஆசிரியர் என்பதை அவ்வப்போது உணரவேண்டும். இறை வழிபாட்டுத் தலங்களுக்குக் குழந்தைகளை அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும். வாரம் ஒருமுறை உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

அலைபேசியில் விளையாட அனுமதிக்காமல், வேறு ஏதேனும் ஒரு விளையாட்டில் நாட்டத்தினை ஏற்படுத்த வேண்டும். தினமும் தியானத்தினை நாமும் மேற்கொண்டு நம் குழந்தைகளையும் மேற்கொள்ளச் செய்ய வேண்டும். தீய நட்பு, கூடா நட்பை தவிர்க்க ஆலோசனை கூறுதல், தேவைப்படும் இடங்களில் கண்டித்தலும் இடம் பெறல் வேண்டும். இவை தான் மனம் தடம் புரளாமல் செய்ய வழிவகுக்கும்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்ற போது அங்கே குற்றமும் ஒழுக்கமின்மையும் பெருகும் என்பதில் ஐயமில்லை. கண்டிப்பான பெற்றோர்கள், கண்டிப்பான ஆசிரியர்கள் இருந்த அந்தக் காலத்தில் குற்றங்கள் பெருகவில்லை, ஒழுக்கக் கேடுகளும் பெருகவில்லை. இன்றைக்கு கண்டிக்கும் மனமும், நேரமும் பெற்றோருக்கு இல்லை. கல்வி நிலையங்களும் கண்டிப்புகளைத் தளர்த்திக் கொண்டதன் விளைவு ஒழுக்கமின்மை பெருகக் காரணமாயிற்று என்று தான் சொல்ல வேண்டும்.

அன்பும் கண்டிப்பும் நிறைந்த ஆசிரியர்கள் தான் பெரும் தலைவர்களை உருவாக்கி இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். கண்டித்தல் என்பது துன்புறுத்தல் அன்று. தவறுகளைத்திருத்த மனதிற்கு வாய்ப்பளித்தல் ஆகும்.

கண்டித்தல் பெற்றோரிடம் இருந்து தான் குழந்தைகளின் மனதைப் பக்குவப்படுத்த முடியும். நம் மகன் நம் நாட்டின் தலைவன் என்ற எண்ணம் பெற்றோரிடம் உருவாக வேண்டும். இன்றைய அடிப்படைத் தேவை மனமாற்றமே! என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும்.

பழையன புகுதலும், புதியன கழிதலும் என்ற நிலைக்கு நம் மனம் மாறி வந்தால் எதிர்கால மனங்கள் நன்மனங்கள் ஆகும்.

ச.சேட்டு மதார்சா, பட்டதாரி ஆசிரியர்

Next Story