செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் அதிர்ஷ்டசாலி..!
அமெரிக்காவை சேர்ந்த அலைஸா கார்சன், செவ்வாய் கிரகத்தில் கால்பதிக்க இருக்கும் முதல் அதிர்ஷ்டசாலி.
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இரவு பகலாக பயிற்சி பெற்றுவருகிறார். நாசா நடத்திய அனைத்து தேர்வுகளிலும் ‘பாஸ்’ மார்க் வாங்கியிருக்கும் அலைஸா, அடுத்தடுத்த பயிற்சிகளுக்கு வேகமாக முன்னேறி இருக்கிறார். அதனால் 2030-ம் ஆண்டிற்கு மேல் செவ்வாய் கிரகம் நோக்கி பறக்க இருக்கும் விண்கலங்களில், அலைஸாவிற்கான இருக்கை ஒருவழியாக உறுதியாகியிருக்கிறது. ‘இளம் வயது விண்வெளி வீராங்கனை’, ‘செவ்வாய் செல்லும் முதல் விண்வெளி வீரர்’ போன்ற கனவுகளை சுமந்துக்கொண்டிருக்கும் அலைஸா, விளையாட்டாக ஆரம்பித்த விண்வெளி ஆசை எப்படி உயிர்பெற்றது என்பதை கூறுகிறார்.
செவ்வாய் கிரகத்திற்கு செல்வது அவ்வளவு சுலபமா?
நினைத்தவுடன் பறந்துவிட முடியாது. நான் 6 வயதிலிருந்தே முயன்றதால், செவ்வாய் கிரகத்திற்கு பறக்கும் வாய்ப்பு உறுதியாகியிருக்கிறது. அறிவியல் கண்காட்சிகள், விண்வெளி சம்பந்தமான கருத்தரங்கம், பள்ளி-கல்லூரிகளில் நடக்கும் அறிவியல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே நமக்கு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கதவுகள் திறக்கும். அங்கும் நம்முடைய திறமையை நிரூபிக்க வேண்டும். இல்லையேல், பாதியிலேயே வீட்டிற்கு நடையை கட்டவேண்டியதுதான்.
செவ்வாய் கிரக பயணத்திற்கான பயிற்சி எப்படி இருந்தது?
உலகின் தலைசிறந்த ராணுவ பயிற்சியை விட கொடுமையானது. உடலையும், உள்ளத்தையும் வறுத்து எடுத்துவிடுவார்கள்.
செவ்வாய் கிரக பயணத்திற்காக, வாழ்க்கையில் தவறவிட்ட விஷயங்களை பற்றி கூறுங்கள்?
பள்ளிக்கூட சூழலை பார்த்திருக்கிறேன், ஆனால் முழுமையாக அனுபவித்தது இல்லை. விண்வெளி வீராங்கனையாக பயிற்சி மேற்கொள்வதால், விண்வெளி பயணம் சம்பந்தமான திரைப்படங்களை தவிர வேறு படங்களை பார்த்தது இல்லை. அதேபோல குடும்ப விழாக்களில் கலந்து கொள்வதும் இல்லை. என்னை பொறுத்தமட்டில், பூமியில் இருக்கும் விஷயங்களை விட, செவ்வாய் கிரகத்தில் இருக்கும் விஷயங்களே மிக முக்கியமானது. அதற்காக என்னுடைய திருமணத்தையும் தியாகம் செய்துவிட்டேன்.
ரோபோ உருவாக்கமும் உங்களுக்கு கைவந்த கலை என்கிறார்களே? உண்மைதானா?
ஆம்..!, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தங்கி பயிற்சி மேற்கொண்ட காலங்களில், அங்கு உருவாக்கப்படும் ரோபோக்களை கண்கூடாக பார்த்திருக்கிறேன். அதன் தாக்கமாக ரோபோ உருவாக்க பயிற்சியும் எடுத்து கொண்டதால், இன்று ரோபோ உருவாக்கமும் சாத்தியமாகிறது.
இதுவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட விண்கலங்களில் உங்களுக்கு பிடித்தமானது எது? ஏன்?
செவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரம் இருப்பதை கண்டுபிடித்த ‘கியூரியாசிட்டி’ விண்கலம் எனக்கு மிகவும் பிடித்தமானது. என்னுடைய செவ்வாய் பயணத்தை உறுதிப்படுத்தியது அதுவே.
செவ்வாய் கிரக பயணத்தில் உங்களுக்கு பிடிக்காத விஷயம் எது?
செவ்வாய் கிரகத்தை அடைய 6 மாதம் விண்வெளியில் பயணம் மேற்கொள்ள வேண்டும். இந்த கடினமான மாதங்களை கடந்தால் மட்டுமே செவ்வாய் கிரகத்தை அடைய முடியும். இந்த 6 மாத விண்வெளி பயணம் சற்று திகிலானதுதான். ஏனெனில் இந்த 6 மாத விண்வெளி பயணத்தில் எதுவேண்டுமானாலும் நிகழலாம். இயந்திர கோளாறு நிகழலாம், எதிர்பாராத விதமாக விண்கற்களால் தாக்கப்படலாம், ஏன்? ஏலியன்களின் தாக்குதல் கூட நிகழலாம். அதனால்தான் இந்த 6 மாத பயணத்தை, கடினமான நாட்கள் என்று குறிப்பிடுகிறேன்.
விண்வெளி வீராங்கனையாக உங்களை வளர்த்தெடுத்த பெருமை யாரை சேரும்?
என்னுடைய பெற்றோரின் உதவியின்றி, இந்த உயரத்தை அடைந்திருக்க முடியாது. அதேசமயம் திக்கு திசை தெரியாமல் தவித்த சமயங்களில் என்னை உற்சாகப்படுத்தியவர்களில் மூவர் முக்கியமானவர்கள். குறிப்பாக கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் பில் பார்சன், நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர் ஜான் கான்லி மற்றும் அமெரிக்க விண்வெளி மற்றும் ராக்கெட் நிலைய முதன்மை நிர்வாக அதிகாரி டெபேரா பார்ன்ஹர்ட் ஆகியோரின் உதவியின்றி என்னால் இந்தளவிற்கு வளர்ந்திருக்க முடியாது. செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் கனவை, நினைவாக்கிய பெருமை இவர்களையே சாரும்.
மார்ஷியன் திரைப்படம் பார்த்தீர்களா? அதில் வருவதை போன்று செவ்வாய் கிரகத்தில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வீர்கள்?
யோசிக்க வேண்டிய கேள்வி. ஆனால் அதற்கான விடையை நான் யோசிப்பதாக இல்லை. ஏனெனில் என்னுடைய முழு கவனமும், செவ்வாய் பயணத்தை வெற்றி பயணமாக மாற்றுவதிலேயே இருக்கிறது.
Related Tags :
Next Story