உடன்குடியில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் 18–ந்தேதி நடக்கிறது


உடன்குடியில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் 18–ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 15 July 2018 2:45 AM IST (Updated: 14 July 2018 7:47 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் வருகிற 18–ந்தேதி நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

உடன்குடி, 

உடன்குடியில் தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் வருகிற 18–ந்தேதி நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

விழிப்புணர்வு முகாம் 

தமிழக முதல்–அமைச்சர் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த பல திட்டங்களை அறிவித்துள்ளார். மானியங்களுடன் கூடிய கடனுதவி, ஈடு உத்தரவாத நிதியம் மற்றும் முயற்சி மூலதன நிதியம் போன்ற திட்டங்கள் அரசின் கொள்கையளவில் வடிவுபெற்றுள்ளன.

இதன் ஒரு பகுதியாக சிறந்த தொழில்முனைவோர்களை கண்டறிய சென்னையில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொழில் மற்றும் வணிகத்துறையின் மாவட்ட தொழில் மையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கத்துடன் (துடிசியா) இணைந்து வருகிற 18–ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு உடன்குடி நகர பஞ்சாயத்து மண்டபத்தில் ஒரு நாள் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாமை நடத்துகிறது.

தொழில் வாய்ப்புகள் 

சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள தொழில் ஆர்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண், பெண் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். முதல்கட்டமாக சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை எப்படி தேர்வு செய்வது, தொழில் முனைவோர்க்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியவை பற்றி இந்த முகாமில் விவரிக்கப்படும்.

முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு, அவர்கள் அடுத்தகட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவார்கள். அடுத்தகட்டமாக திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.

விவரங்களுக்கு... 

தகுதி உள்ளவர்கள் அரசு வழங்கும் மானிய திட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன்மூலம் நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயிற்சிகளில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் மாவட்ட தொழில் மையங்களும் இணைந்து செயல்படும். எனவே, அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும், அதன்மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு 0461–2347005, 9840158943, 7708784867 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story