சூறாவளி காற்று எதிரொலி: தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


சூறாவளி காற்று எதிரொலி: தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 15 July 2018 4:30 AM IST (Updated: 14 July 2018 10:04 PM IST)
t-max-icont-min-icon

வங்க கடலில் வீசிவரும் சூறாவளி காற்று எதிரொலியால் தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், அண்ணாநகர் புதுத்தெரு, மந்திரிப்பட்டிணம், செம்பியன்மாதேவிப்பட்டினம், கணேசபுரம் உட்பட 32–க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் பாய்மர படகு, பைபர் கிளாஸ் படகு, கட்டுமரங்கள் என சுமார் 4 ஆயிரம் நாட்டுப்படகுகளும் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 301 விசைப்படகுகளும் உள்ளன. விசைப் படகுகள் திங்கள், புதன், சனிகிழமைகளிலும், மற்ற தினங்களில் நாட்டுப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள சூறாவளி காற்று காரணமாக காற்று 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனக் கூறி ஒட்டுமொத்த தமிழக மீனவர்களையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

எனவே மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி டோக்கன் வழங்கவில்லை. இதனால் வழக்கம்போல் கடலுக்கு செல்ல வேண்டிய தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்படாததால் நேற்று முன்தினம் நாட்டுப்படகு மீனவர்களும் நேற்று சனிக்கிழமை முதல் விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் மீனவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலையிழந்துள்ளனர். கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.


Next Story