வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும்
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
செம்பட்டு,
திருச்சி விமானநிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மாநில அரசின் உரிமைகளை பறிப்பது போல மத்திய அரசின் எந்த நடவடிக்கையும் இல்லை. உயர் கல்வி ஆணையம் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதை குற்றச்சாட்டாக கூறுகிறீர்கள். மாற்ற வேண்டிய தேவை இருப்பதால் மாற்றப்படுகிறது.
ஊழலை ஒழிப்பதாக கூறி யாரையும் மத்திய அரசு கைது செய்யவில்லை என தம்பிதுரை கூறியிருக்கிறார். இதற்கு வெளிப்படையாக பதில் சொல்ல முடியாது. யாரையும் கண்ணை மூடிக்கொண்டு உடனடியாக கைது செய்ய முடியாது. ஊழல் செய்தவர்கள் தப்பாத வகையில் மத்திய அரசின் நடவடிக்கை இருக்கும்.
தமிழகத்தில் ஊழல் நிறைந்திருப்பதாக அமித்ஷா தெளிவாக எடுத்துக்கூறியிருக்கிறார். தமிழகத்தில் இருக்க கூடிய ஊழல் நிறைந்த நிலையை மாற்றி ஊழலற்ற, நேர்மையான ஒரு நிர்வாகத்தை கொடுக்கின்ற உணர்வில் அவர் அப்படி பேசினார்.
நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். பா.ஜ.க. எந்த தேர்தலையும் சந்திக்க தயாராக உள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிகப்படியான இடங்களை வெற்றி பெற்று முதல் கட்சியாக இருக்கும். சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் ஆளுமை தமிழகத்தில் தெரியும்.
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம். தேர்தலுக்கு முன்பாக கூட்டணி பற்றி யார் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். தேர்தல் வரும் போது தான் அரசியல் கட்சிகளின் கூட்டணி நிலை தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட தலைவர் தங்கராஜய்யன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.