குடிமராமத்து திட்டத்தில் 24 கண்மாய்கள் சீரமைப்பு, கலெக்டர் தகவல்


குடிமராமத்து திட்டத்தில் 24 கண்மாய்கள் சீரமைப்பு, கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 15 July 2018 3:15 AM IST (Updated: 14 July 2018 11:04 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.5½ கோடி மதிப்பீட்டில் 24 கண்மாய்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன என்று கலெக்டர் லதா தெரிவித்தார்.

சிவகங்கை,

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பொதுப்பணித்துறையின் மூலம் சருகனி ஆறு வடிநில கோட்டம் மற்றும் கீழ்வைகை வடிநில கோட்டத்தின்கீழ் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை கலெக்டர் லதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குடிமராமத்து பணிகள் நடைபெற்று வரும் மடப்புரம் பெரிய கண்மாய், சக்கந்தி பெரிய கண்மாய், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் பிரவலூர் பெரிய கண்மாய் ஆகியவற்றை பார்வையிட்டு பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:–

விவசாயிகளுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள ஏதுவாக பாசன கண்மாய்களில் போதிய அளவு தண்ணீர் தேக்கி பயன்படுத்தும் வகையில் குடிமராமத்து பணியை தொடங்கி, உடனடியாக செயல்படுத்த முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் சருகனி ஆறு வடிநில கோட்டம் மற்றும் கீழ்வைகை வடிநில கோட்டத்தின்கீழ் 24 கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

வருகிற பருவ மழை காலத்தை கருத்தில் கொண்டு இப்பணிகள் மிக வேகத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கண்மாயின் உட்பகுதியில் மண் எடுத்து கரையை பலப்படுத்தப்படுகின்றன. மேலும் மடைகள் பழுதடைந்திருந்தால் உடனடியாக சீரமைக்கப்படுகிறது. அதேபோல் கழுங்கு பகுதியும் சீரமைக்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி கண்மாயின் உட்புறப்பகுதிகளில் கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற செடி, கொடிகள் அனைத்தும் அகற்றப்பட்டு முழுமையாக சீர் செய்யப்படுகிறது. இதனால் மழை காலத்தில் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் தேங்குவது மட்டுமின்றி, அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் நிலை உருவாகிறது. இத்திட்டத்தின் நோக்கம் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை காலதாமதமின்றி முழுமையாக செயல்பட்டு பயன்பெற வேண்டும் என்பதே.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது சருகனியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர்கள் மலர்விழி, ரமேஷ், ராஜாராம் மற்றும் பாசன விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் சீரமைக்கப்படும் 24 கண்மாய்கள் விவரம் பின்வருமாறு:–

பிரவலூர் கண்மாய், நாலுகோட்டை அச்சப்புளி கண்மாய், புதுப்பட்டி சக்கந்தி கண்மாய், பாசாங்கரை கண்மாய், நாட்டரசன்கோட்டை விளாத்தக்குடி கண்மாய், குறுக்கை கண்மாய், சாக்கை கண்மாய், கொல்லங்குடி கண்மாய், சீறியூர் கண்மாய், நகரக்குடி வாணி கண்மாய், கோட்டையூர் கண்மாய், சிறுபாலை கண்மாய், வண்டல் கண்மாய், இண்டன்குளம் கண்மாய், நாகமுகுந்தன்குடி கண்மாய், சோதுகுடி பூச்சியேந்தல் கண்மாய், தாயமங்கலம் கண்மாய், சிறுகுடி கண்மாய், செய்களத்தூர் கண்மாய், முதுவன்திடல் மரகதவல்லி கண்மாய், பூவந்தி கண்மாய், மடப்புரம் கண்மாய், சோமாச்சியேந்தல் கிராமத்தில் கண்டனி கண்மாய், கிருங்காகோட்டை கண்மாய்.


Next Story