கல்வராயன்மலையில் கோடை விழா அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்


கல்வராயன்மலையில் கோடை விழா அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 July 2018 5:00 AM IST (Updated: 15 July 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் நடைபெற்ற கோடைவிழாவை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

கச்சிராயப்பாளையம்,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த கல்வராயன்மலை கரியாலூரில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு தமிழக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் சுற்றுலா துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பழனிகுமார், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு கோடை விழாவை தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக பல்துறை பணிவிளக்க கண்காட்சி அரங்குகளை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.


விழாவையொட்டி மலைப்பகுதியில் அனைவரையும் வரவேற்கும் விதமாக அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் காவல்துறை, தோட்டக்கலை, சுகாதாரம், கல்வி, வேளாண்மை, புதுவாழ்வு திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கால்நடை பராமரிப்பு, பொதுப்பணித்துறை, கூட்டுறவு, மின்வாரியம் ஆகிய துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மலைவாழ் மக்களுக்கு விளக்கும் வகையில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இதில் தோட்டக்கலைத்துறை சார்பில் 300 கிலோ எடையில் திராட்சை பழங்களால் நந்தி சிலை அமைக்கப்பட்டிருந்தது. மேலும் 200 கிலோ எடையில் கத்தரிக்காய், முள்ளங்கி, கேரட் ஆகியவற்றால் மயில் உருவம் அமைக்கப்பட்டிருந்தது. இதேபோல் தர்பூசணியில் வரையப்பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவங்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

கலை நிகழ்ச்சி

மேலும் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியில் 50 வகையான துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள், பீரங்கிகள் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டு இருந்தன. சுகாதாரத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து மாலையில் நாட்டுப்புற பாடல்கள், குழு நடனம், கிராமிய கலை நிகழ்ச்சி, மல்லர் கம்பம் விளையாட்டு, பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

பின்னர் வனத்துறை சார்பில் மரங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், மரத்தை வெட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் செயல் விளக்கம் கொடுக்கப்பட்டது. காசநோய் வருவதை கண்டறிவது குறித்தும் அதை தடுப்பது குறித்தும் சுகாதாரத்துறை சார்பில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.


கோடை விழாவை காண வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கரியாலூர் படகு குழாமில், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் வெள்ளிமலையில் இருந்து கச்சிராயப்பாளையம் வழியாக கல்வராயன்மலைக்கும், வெள்ளிமலையில் இருந்து சேராப்பட்டு வழியாக சங்கராபுரத்துக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

நிறைவு நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு சிறந்த அரங்குகளுக்கு பரிசு வழங்குகிறார்.

Next Story