கோத்தகிரி பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு


கோத்தகிரி பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 15 July 2018 3:30 AM IST (Updated: 15 July 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு செய்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி பகுதிகளில் பொது சுகாதாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார். நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா காலனி, காக்காசோலை மற்றும் கெங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அம்பாள் நகர், தேனாடு ஊராட்சிக்கு உட்பட்ட ஹோம்நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்தும், சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து காக்காசோலையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகைப்பதிவேடு, இருப்பு பதிவேடு, மதிய உணவு, சமையல் அறை ஆகியவற்றையும் கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட தவிட்டு மேடு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய பணிகளை விரைவாக முடிக்கும்படி அறிவுறுத்தினார். மேலும் கெங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அகநாடு ஆதிதிராவிடர் காலனி பகுதியில் மத்திய சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் செலவில் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டார். இதில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொறுப்பு) ஜெய்குமார், தாசில்தார் தனபாக்கியம், வட்டார வளர்ச்சி அலுவலர் கோல்டிசாராள், கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story