பாலக்காடு அருகே மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலி
பாலக்காடு அருகே மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலியாகினர்.
பாலக்காடு,
கேரள மாநிலம் பாலக்காடை அடுத்த வடக்கன்சேரி அருகே கிழக்கன்சேரியை சேர்ந்தவர் மோகனன் (வயது 55). இவருடைய மகன் பேரயஸ் (12). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் வீட்டில் பழுதான மோட்டார் பம்பு செட்டை மோகனன் மற்றும் பேரயஸ் ஆகியோர் பழுது பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரையும் மின்சாரம் தாக்கியது.
இதில் உடல் கருகிய நிலையில் 2 பேரும் அலறி துடித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 2 பேரையும் மீட்டு வடக்கன்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மோகனன், பேரயஸ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து வடக்கன்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் பம்புசெட்டை பழுது பார்த்த போது மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.