முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்


முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 15 July 2018 4:15 AM IST (Updated: 15 July 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் பணிகளை மேற்கொள்ளும் நிர்வாக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர்,

தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கரூரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணன் வரவேற்று பேசினார். முன்னாள் மாநில தலைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். பொது செயலாளர் நம்பிராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மருத்துவத்துறையில் பணிபுரியும் நிர்வாக ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும். நிர்வாக பணியிடங்களில் பணிபுரிவோருக்கு நிலுவையிலுள்ள பதவி உயர்வினை வழங்கிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி விண்ணப்பித்திருப்பவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி பணிநியமனம் வழங்க வேண்டும்.

முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் பணிகளை மேற்கொள்ளும் நிர்வாக அலுவலர், இளநிலை நிர்வாக அலுவலர் மற்றும் நிர்வாக ஊழியர்களின் ஊக்கத்தொகையை விரைந்து வழங்க வேண்டும். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிர்வாக பிரிவிற்கு புதிய பணியிடம் உருவாக்கித்தர வேண்டும். கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தேவையான பணியிடங்களை உருவாக்கி ஒப்பளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் உள்பட மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் தங்கவேல் நன்றி கூறினார். 

Next Story