மீஞ்சூர் ஒன்றியத்தில் ரூ.3 கோடியில் வளர்ச்சி பணிகள்; திட்ட இயக்குனர் ஆய்வு


மீஞ்சூர் ஒன்றியத்தில் ரூ.3 கோடியில் வளர்ச்சி பணிகள்; திட்ட இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 15 July 2018 4:00 AM IST (Updated: 15 July 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் ரூ.3 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.

மீஞ்சூர்,

மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பூங்குளம், மெதூர், காட்டுப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.3 கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி பூங்குளம் ஊராட்சியில் பழவேற்காடு ஏரியின் உவர்ப்பு நீர் புகாத வண்ணமும், மழை நீரை தேக்கி வைப்பதற்காகவும் பூங்குளம் ஓடையில் ரூ.15 லட்சத்தில் தடுப்பணையும், பொதியாரங்குளம் அரசு ஆரம்ப பள்ளிக்கு ரூ.9 லட்சத்தில் சுற்றுசுவர் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

மெதூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி நிதியில் ரூ.30 லட்சத்தில் உடற்பயிற்சி கூடத்துடன் அம்மா பூங்கா அமைக்கும் பணியும், காட்டுப்பள்ளி ஊராட்சியில் காட்டுப்பள்ளி முதல் பழவேற்காடு வரை செல்லும் 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள பழுதடைந்த சாலையை ரூ.2 கோடியே 44 லட்சத்தில் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று, முடியும் தருவாயில் உள்ளது.

இந்தநிலையில் ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் குமார், நேற்று மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள பூங்குளம், மெதூர், காட்டுப்பள்ளி ஆகிய 3 ஊராட்சிகளுக்கும் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது ஊரக வளர்ச்சி துறை பொறியாளர் ஜெரால்டு, ஒன்றிய பொறியாளர்கள் நரசிம்மன், கெஜலட்சுமி, மீஞ்சூர் ஒன்றிய ஆணையாளர் வேதநாயகம், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு, ஊராட்சி செயலாளர்கள் செந்தில்குமார், தரணிதரன், நாகஜோதி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story