கள் இறக்கிய வாலிபர் கைது பொய் வழக்கு போட்டதாக விவசாயிகள் சங்கத்தினர் குற்றச்சாட்டு


கள் இறக்கிய வாலிபர் கைது பொய் வழக்கு போட்டதாக விவசாயிகள் சங்கத்தினர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 July 2018 4:30 AM IST (Updated: 15 July 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

க.பரமத்தி அருகே கள் இறக்கியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டிருப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.

க.பரமத்தி,

க.பரமத்தி அருகே பவுத்திரம் மேட்டுகடையை சேர்ந்தவர் நல்லசிவம்(வயது 34). இவர் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தில் வட்டார தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமாக வானவிழி பகுதியில் தென்னந்தோப்பு உள்ளது. இங்கு கள் இறக்கி சட்டவிரோதமாக விற்கப்படுவதாக க.பரமத்தி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் நேற்று அங்கு சென்று தோப்பில் சோதனையிட்டனர். அப்போது அங்கு பானையில் கள் இறக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இது குறித்து விஷத்தன்மையுடன் கள் இறக்கியதாக வழக்குப்பதிவு செய்து நல்லசிவத்தை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அந்த தோப்பிலிருந்து 5 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கிடையே நல்லசிவம் கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக வந்த தகவலை அடுத்து அந்த சங்கத்தின் மாநில துணை தலைவர் சண்முகம், கோவை மாவட்ட தலைவர் பாபு, கரூர் மாவட்ட தலைவர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது விவசாயியான நல்லசிவத்தின் மீது விஷத்தன்மை கொண்ட கள் இறக்கியதாக எப்படி வழக்குப்பதிவு செய்யலாம்? என அவர்கள் கேள்வி எழுப்பினர். எனினும் ஆஸ்பத்திரியில் நல்லசிவம் இல்லாததால் அங்கிருந்து அவர்கள் மனுகொடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக மாநில துணை தலைவர் சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், மது நாட்டுக்கும்- வீட்டுக்கும் கேடு என எழுதி வைத்து விட்டு விஷத்தன்மையுடைய பானத்தை விற்கின்றனர். ஆனால் உடலுக்கு ஆரோக்கியமான கள் பானத்தை இறக்கினால் சட்டவிரோதம் என கூறுவது நியாயம் தானா? இதற்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இந்த நிலையில் நல்லசிவம் மீது விஷத்தன்மையுடைய கள் இறக்கியதாக பொய்வழக்கு போட்டுள்ளதை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டத்தில் நாங்கள் இறங்குவோம் என்று கூறினார். 

Next Story