மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டில் லோக் அதாலத் மூலம் வழக்குகளுக்கு தீர்வு
மதுரை மாவட்ட கோர்ட்டில் மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் பல்வேறு அமர்வுகளாக வழக்குகளுக்கு சுமூக தீர்வுகாணும் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை,
மதுரை மாவட்ட கோர்ட்டில் மாவட்ட முதன்மை நீதிபதி சத்திகுமார் தலைமையில் கூடுதல் செசன்ஸ் நீதிபதிகள் கணேசன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு அமர்வுகளாக வழக்குகளுக்கு சுமூக தீர்வுகாணும் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விபத்து இழப்பீடு வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், செல்போன் நிறுவன வழக்குகள், இன்ஸ்சூரன்ஸ் நிறுவன வழக்குகள் என மொத்தம் 24 ஆயிரத்து 929 வழக்குகள்எடுத்துக் கொள்ளப்பட்டன. முடிவில் 3 ஆயிரத்து 810 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 17 கோடியே 2 லட்சத்து 12 ஆயிரத்து 857 ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு செயலாளர் பன்னீர்செல்வம் செய்திருந்தார்.
இதேபோல மதுரை ஐகோர்ட்டில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் 930 வழக்குகள் சுமூக தீர்வு காண்பதற்கு பட்டியலிடப்பட்டது. அதில் 104 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன. இதன் மூலம் 11 கோடியே 26 லட்சத்து 38 ஆயிரத்து 193 ரூபாய் வழங்கப்பட்டது. நீதிபதிகள் சுந்தர், நிஷாபானு, தாரணி, கிருஷ்ணவள்ளி, ஓய்வு பெற்ற நீதிபதி ராமலிங்கம், வக்கீல் சங்க செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வுகள் வழக்குகளுக்கு தீர்வு அளித்தன.