உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை, தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு


உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை, தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 15 July 2018 3:45 AM IST (Updated: 15 July 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மதுரையில் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மதுரை,

உள்ளாட்சித் தேர்தல் நடத்துதல் தொடர்பான முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தலைமை தாங்கினார். கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நகர்ப்புறங்களுக்கு தேர்தல் நடத்துவதற்காக தேவைப்படும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணக்கிட்டு அறிக்கை அனுப்பவும், தேர்தல் தொடர்பான உபகரணங்கள், கூடுதலாக வாக்குச் சாவடிகள் தேவைப்படின் மாவட்ட கலெக்டர் மூலமாக கோரிக்கை அனுப்பிவைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

சட்டபூர்வ படிவங்கள், இதர படிவங்கள், கையேடுகள் போன்ற அனைத்து தேர்தல் உபகரணங்கள் இருப்பு உள்ளதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே வேட்பாளர்கள் செலுத்திய வைப்புத் தொகையினை வருகிற 31–ந் தேதிக்குள் திரும்ப வழங்க வேண்டும். மேலும் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று ஆணையர் மாலிக் பெரோஸ்கான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் அம்ரித், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் நவநீதகிருஷ்ணன், வானதி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) லட்சுமி, உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story