மணல் கடத்தலை தடுத்தவர்களை காரால் ஏற்ற முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது வழக்கு


மணல் கடத்தலை தடுத்தவர்களை காரால் ஏற்ற முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 July 2018 4:00 AM IST (Updated: 15 July 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தலை தடுத்தவர்களை காரால் ஏற்ற முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தா.பேட்டை,

திருச்சி மாவட்டம் தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி தலைமையில் ஆராய்ச்சி கிராமநிர்வாக அதிகாரி அசோக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தா.பேட்டை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தா.பேட்டை - துறையூர் செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் லாரியின் முன்புறம் காரில் சென்ற தொட்டியத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 55), அவரது மகன் அஜித்குமார் (30), உறவினர் நாகரத்தினம் (40) ஆகியோர் ‘லாரியில் இருப்பது கடத்தல் மணல் தான் உங்களால் என்ன செய்ய முடியும்’ என்று கூறி மிரட்டியபடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது காரால் மோத முயற்சி செய்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி அசோக்குமார் தா.பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கிருஷ்ணமூர்த்தி, அஜித்குமார், நாகரத்தினம் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து, லாரி டிரைவர் சரவணன் (30) என்பவரை கைது செய்தனர். இதில் தப்பி சென்ற கிருஷ்ணமூர்த்தி திருச்சியில் உள்ள போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story