புதுவை சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு இருக்கைகள் ஒதுக்க வேண்டும் - கவர்னர் பேட்டி
புதுவை சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பொதுமக்களிடம் இருந்து வரும் புகாரை தொடர்ந்து அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் காலாப்பட்டில் உள்ள தனியார் மருந்து தொழிற்சாலையில் நிலத்தடி நீர் அதிக அளவு எடுக்கப்படுவதாகவும், கழிவுநீர் சுத்திகரிப்பு முறையாக நடைபெறவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இதனைதொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நேற்று காலை காலாப்பட்டில் உள்ள தனியார் மருந்து தொழிற்சாலைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தொழிற்சாலை அதிகாரிகளை வரவழைத்து அவர்களிடம் தொழிற்சாலைக்கு உரிய ஆவணங்களை வாங்கி பார்வையிட்டார். அப்போது அவருக்கு பவர் பாய்ண்ட் மூலம் விளக்கம் அளித்தனர்.
பின்னர் மழைநீர் சேகரிப்பு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து கவர்னர் கேட்டார். மேலும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து மீட்டர் பொருத்தப்படாமல் நீர் எடுக்கப்படுவதை பார்த்து, இது அதிக நீர் எடுப்பதற்கு வழி வகுக்கும் என்று கவர்னர் கிரண்பெடி எச்சரித்தார். இதனை ஈடு செய்யும் வகையில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் சுனாமி குடியிருப்பு பகுதியில் குளம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதனை செயல்படுத்துவதாக நிறுவன அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அங்கிருந்து புறப்பட்ட கவர்னர் கிரண்பெடி புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே கடற்கரை பகுதிக்கு சென்றார். அங்கு கவர்னரின் 175–வது ஆய்வை முன்னிட்டு கவர்னர் மாளிகை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது தூய்மைப்பணியை மேற்கொண்டதுடன், புதுச்சேரியை நீர்வளமிக்க பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறேன். இதற்காக பாடுபடுபவர்களுக்கு நல்ல குடிமகன் விருது வழங்க வேண்டும் என்று அதிகாரிகயை கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறுகையில், ‘நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு இருக்கைகள் ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளரை நியமன எம்.எல்.ஏ.க்கள் அணுகலாம். சட்டப்பேரவைக்கு அவர்கள் செல்லலாம். அவர்களுக்கு அங்கு இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை என்றால் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.