வில்லியனூர் அருகே ஆற்றில் மணல் அள்ளும் தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை


வில்லியனூர் அருகே ஆற்றில் மணல் அள்ளும் தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 15 July 2018 4:45 AM IST (Updated: 15 July 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மர்மக் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

வில்லியனூர்,

புதுவை மாநிலம் வில்லியனூரை அடுத்த கரையான்பேட் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் இளவரசன் (வயது 25). எம்.காம்., பட்டதாரி. திருமணம் ஆகாதவர். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், இளவரசன் மாடு வளர்த்து பால் விற்பனை செய்து வந்தார். மேலும் மாட்டு வண்டி மூலம் சங்கராபரணி ஆற்றில் மணல் எடுத்து விற்பனை செய்தும் வந்துள்ளார்.

இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரையாம்பேட் பகுதி முகாம் துணைச் செயலாளராகவும் இருந்தார்.

இந்தநிலையில் சங்கராபரணி ஆற்றில் மணல் எடுப்பது தொடர்பாக இளவரசனுக்கும், கணுவாப்பேட்டை சேர்ந்த சிலருக்கும் தகராறு இருந்து வந்தது. நேற்று மாலை 6.30 மணியளவில் பால் சப்ளை செய்வதற்காக இளவரசன் கணுவாபேட்டில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தி நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அவருடன் அவரது நண்பர் இனியனும் சென்றார்.

கூட்டுறவு பால் உற்பத்தி நிலையத்தில் பாலை ஊற்றிவிட்டு, இளவரசனும், இனியனும் கரையான்பேட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது கணுவாபேட் அங்காளம்மன் கோவில் அருகே 3 மோட்டார் சைக்கிள்களில் எதிரே முகமூடி அணிந்து வந்த ஒரு மர்மகும்பல், இளவரசனை வழிமறித்தது. இதை சற்றும் எதிர்பாராத இளவரசன் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்து தப்பி ஓட முயன்றார். அவருடன் வந்து இருந்த இனியன் தப்பிச் சென்றார்.

அவரை அந்த கும்பல் விட்டு விட்டு இளவரசனை மட்டும் ஓடவிடாமல் சுற்றி வளைத்தது. இதன்பின் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டி தள்ளியது. இதில் தலை, கை, கால் உள்பட உடல் முழுவதும் படுகாயமடைந்த இளவரசன் அந்த இடத்திலேயே சரிந்து விழுந்தார்.

இதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய இளவரசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே இளவரசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்–இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். இளவரசனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பயங்கர கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்மகும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மணல் அள்ளும் தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இளவரசன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இளவரசன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கரையான்பேட், கணுவாப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மணல் கொள்ளையை தடுப்பது தொடர்பாக நேற்று முன்தினம் டி.ஜி.பி. சுந்தரி நந்தா சங்கராபரணி ஆற்றில் ஆய்வு செய்தார். மணல் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த கொலை சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story