சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் தஞ்சை, திருவாரூரில் 42 இடங்களில் வைபை வசதி


சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் தஞ்சை, திருவாரூரில் 42 இடங்களில் வைபை வசதி
x
தினத்தந்தி 15 July 2018 4:15 AM IST (Updated: 15 July 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா பயணிகள் பயன்பெறும்வகையில் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் 42 இடங்களில் வைபை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது என்று தொலைபேசி ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை தொலைத்தொடர்பு மாவட்டத்தின் 3-வது ஆலோசனை கூட்டம் பரசுராமன் எம்.பி. தலைமையில் தஞ்சையில் நடந்தது. பி.எஸ்.என்.எல். கோட்ட தலைமை பொது மேலாளர் வினோத் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பரசுராமன் எம்.பி. பேசுகையில், “தஞ்சை மாவட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தரமான தரைவழி மற்றும் அலைபேசி சேவைகளை வழங்க வேண்டும். மத்திய அரசு உத்தரவுப்படி தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பாபநாசத்தில் தலா 2 இடங்களிலும், பட்டுக்கோட்டையில் 9 இடங்களிலும், தஞ்சையில் 7 இடங்களிலும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 8 இடங்களிலும், திருத்துறைப்பூண்டியில் 7 இடங்களிலும், திருவாரூரில் 7 இடங்களிலும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் வைபை வசதி புதிதாக ஏற்படுத்தப்படும்”என்றார்.

முதன்மை பொது மேலாளர் வினோத் பேசுகையில், “செல்போன் வாடிக்கையாளர்கள் ரூ.99-க்கு ரீசார்ஜ் செய்து 26 நாட்களுக்கு பி.எஸ்.என்.எல். உள்பட அனைத்து வகையான வாடிக்கையாளர்களிடமும் அளவற்று பேசலாம். ரூ.98 சிறப்பு ரீசார்ஜ் செய்து 26 நாட்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா பயன்படுத்தலாம். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரூ.1,999 திட்டத்தில் ஆண்டு முழுவதும் தினமும் 2 ஜி.பி. டேட்டா மற்றும் அனைத்து வகையான செல்போன் வாடிக்கையாளர்களிடமும் இலவசமாக பேசிக்கொள்ளலாம்.

ரூ.1,199 மாத திட்டத்தின் கீழ் அளவற்ற இணையதள டேட்டா மற்றும் அனைத்து வகையான செல்போன் வாடிக்கையாளர்களிடமும் அளவற்று பேசலாம். மேலும் தரைவழி தொலைபேசி சேவையுடன் சேர்த்து 3 இலவச சிம்கார்டுகள் வழங்கப்படும். இதிலும் பி.எஸ்.என்.எல். உள்பட அனைத்து வகையான செல்போன் வாடிக்கையாளர்களிடமும் ஆண்டு முழுவதும் அளவற்று பேசலாம். இதனுடன் கூடுதலாக ஒரு தரைவழி தொலைபேசி 2 மாதத்திற்கு மட்டும் வழங்கப்படும்”என்றார்.

கூட்டத்தில் தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் அறிவழகன், பன்னீர்செல்வம், ராஜமோகன், நெல்சன், சாமிநாதன், இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக துணை பொது மேலாளர் ராஜாராமன் வரவேற்றார். முடிவில் துணை பொது மேலாளர் விவேகானந்தன் நன்றி கூறினார். 

Next Story