ரூ.2 கோடி மரகத சிலை திருட்டு: குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு


ரூ.2 கோடி மரகத சிலை திருட்டு: குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
x
தினத்தந்தி 15 July 2018 4:45 AM IST (Updated: 15 July 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே முருகன் கோவிலில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான மரகத சிலை மற்றும் வெள்ளி வேல் திருடப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த பழைய அலமாதியில் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலை ஓரத்தில் தங்கவேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் கருவறையில் வைக்கப்பட்டு இருந்த ஒரு அடி உயர மரகதத்தால் ஆன முருகன் சிலை மற்றும் 1 அடி உயர வெள்ளி வேல் ஆகியவை திருடப்பட்டு இருந்தது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. திருடுபோன முருகன் சிலையின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

இது குறித்து கோவில் நிர்வாகியான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகுமார், சோழவரம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த விவகாரத்தில் தற்போது பொன்னேரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படை போலீசார், ஏற்கனவே சோழவரம் போலீஸ் எல்லையில் சிலை திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 10 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சிலை மற்றும் வேல் திருட்டு விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் எனக்கூறிய போலீசார், இது குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Next Story