பெரம்பூர் பகுதியில் அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்


பெரம்பூர் பகுதியில்  அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 15 July 2018 4:30 AM IST (Updated: 15 July 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பூர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவாதாக கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பூர்,

சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டலம், தண்டையார் பேட்டை மண்டலம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் திரு.வி.க.நகர் 6-வது மண்டலம் பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரே பெரம்பூர் நெடுஞ்சாலை மற்றும் மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினார்கள். அப்போது அந்த பகுதி சிறு வியாபாரிகள், ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,

இந்த நிலையில் பெரம்பூரில் சென்னை மாநகராட்சி 44-வது வார்டுக்கு உட்பட்ட மேல்பட்டி பொன்னப்பன் தெரு, பழனி ஆண்டவர் கோவில் தெரு, மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி தண்டையார்பேட்டை 4-வது மண்டல அதிகாரி அனிதா உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று காலை உதவி செயற்பொறியாளர் மாதவ சங்கர், உதவி பொறியாளர்கள் பிரபு, ஜெரால்டு மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் 44-வது வார்டுக்கு உட்பட்ட மேற்கண்ட பகுதிக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு வீடுகள் மற்றும் கடைகள் முன்பு அமைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள்.

அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு பொக்லைன் எந்திரத்தை இயக்கவிடாமல் தடுத்தனர். “ஒரு சில ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மட்டுமில்லாமல், பாரபட்சமின்றி அனைத்து கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். இல்லையென்றால் பாதிக்கப்படக்கூடிய வியாபாரிகள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” என பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் செம்பியம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.

Next Story