ரூ.18 கோடியே 35 லட்சம் மதிப்பிலான குறுவை தொகுப்பு திட்டம் அமைச்சர் தொடங்கி வைத்தார்


ரூ.18 கோடியே 35 லட்சம் மதிப்பிலான குறுவை தொகுப்பு திட்டம் அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 July 2018 4:15 AM IST (Updated: 15 July 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடியில், ரூ.18 கோடியே 35 லட்சம் மதிப்பிலான குறுவை தொகுப்பு சாகுபடி திட்டத்தை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் ரூ.18 கோடியே 35 லட்சம் மதிப்பிலான குறுவை தொகுப்பு திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். நாகை டாக்டர் கோபால் எம்.பி. முன்னிலை வகித்தார்.

இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு குறுவை தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது 100 பயனாளிகளுக்கு ரூ.67 லட்சம் மதிப்பில் இடு பொருட்கள், வேளாண் எந்திரங்களை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் விவசாயிகளின் தேவைகள் அறிந்து காலத்தில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்ற அரசாக தற்போதைய அரசு செயல்பட்டு வருகிறது. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளது. தற்போது நடப்பாண்டில் குறுவை சாகுபடியினை ஊக்குவிக்கும் விதமாக குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.18 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 12 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை குறுவை பருவத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையில் 14,134 எக்டேரிலும், இயல்பான சாகுபடி முறையில் 6,990 எக்டேரிலும் என மொத்தம் 21 ஆயிரத்து 124 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 58.76 எக்டேர் பரப்பில் திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்று விடப்பட்டு 5,880 எக்டேரில் நடவு செய்ய நிலம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைத்து அரசின் நலத்திட்ட உதவிகளையும் பயன்படுத்தி அதிக மகசூல் எடுத்திட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

முன்னதாக ஆலங்குடியில் விளை நிலத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ் நடவு எந்திரம் மூலம் நாற்று நடுவதை அமைச்சர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, வேளாண்மை இணை இயக்குனர்(பொறுப்பு) சிவக்குமார், துணை இயக்குனர் கல்யாணசுந்தரம், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணமணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அந்தோணி பால்ராஜ், வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் பாப்பா சுப்பிரமணியன், சம்பத், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் குணசேகரன், முன்னாள் ஊராட்சி தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story