உங்களுக்கும் தொழில்முனைவோராக ஆசையா? (படியுங்கள்.. பயனடையுங்கள்..)
வெற்றிபெற்ற தொழிலதிபர்களை பார்க்கும்போதெல்லாம், சராசரி மனிதர்கள் ஒவ்வொருக்குள்ளும் இருந்து ஒரு தொழில் சிந்தனை தலைதூக்கும்.
வெற்றிபெற்ற தொழிலதிபர்களை பார்க்கும்போதெல்லாம், சராசரி மனிதர்கள் ஒவ்வொருக்குள்ளும் இருந்து ஒரு தொழில் சிந்தனை தலைதூக்கும். உடனே இன்ெனாரு புறத்தில் இருந்து, ‘அதெல்லாம் நமக்கு சரிப் படாதுப்பா..’ என்ற எண்ணம் உருவாகி, அந்த கனவை கலைத்து தொழில் சிந்தனையை துளிர்க்கவிடாமலே செய்துவிடும். அத்தகைய எதிர்மறை நிலையை மாற்றி, ஒவ்வொருவருக்குள்ளும் உருவாகும் தொழில் சிந்தனையை அப்படியே வளர்த்து, வழிகாட்டி, மேம்படுத்தி, அவர்களை தொழில்முனைவோராக உருவாக்கிக்காட்ட தமிழக அரசு வழிகாட்டிக்கொண்டிருக்கிறது. சென்னை கிண்டியில் இயங்கும், ‘தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்’ அதற்கான பணிகளை செய்துகொண்டிருக்கிறது. அதன் இயக்குனரும், முதன்மை செயலாளருமான வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். அது பற்றி விளக்கமாக கூறும், விசேஷ பேட்டி இது:
தொழில்முனைவோர் என்றால் என்ன?
தொழில்முனைவு என்பது ஒரு புது தொழிலை வடிவமைப்பதும், தொடங்குவதும், வெற்றிகரமாக நடத்துவதுமாகும். பெரும்பாலும் அது சிறு தொழில் களையே குறிக்கும். இத்தகைய தொழில்களை வடிவமைப்பவர்களை தொழில்முனைவோர் என்று அழைக்கிறோம். ஏற்கனவே குடும்பத்தினர் செய்து வந்த ஒரு தொழிலைத் தொடர்ந்து செய்பவர்களுக்கும், தாமாக முன்வந்து முதன்முறையாகத் தொழிலைத் தொடங்குபவர்களுக்கும் வேறுபாடு உண்டு. தொழில்முனைவோராக ஆவதற்கு நிறைய ஆர்வமும், ஈடுபாடும் அவசியம். ஏற்கனவே குடும்பத்தினர் மேற்கொள்ளும் தொழிலைச் செய்வதற்கு அத்தகைய துணிவோ, முனைப்போ தேவையில்லை.
வர்த்தகருக்கும், தொழில்முனைவோருக்கும் என்ன வேறுபாடு?
தொழில்முனைவோரும் வர்த்தகத்தின் அடிப் படையிலேயே செயல்படுகிறார்கள். லாபம் ஈட்டுவது இரண்டுக்கும் பொதுவானது. ஆனால், வர்த்தகத்தைக் காட்டிலும் பரந்துபட்ட நோக்கம் தொழில் முனைவோருக்கு இருக்கிறது. உதாரணமாக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நானோ ஆய்வுத் துறையில் ஸ்டிக்கர் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பழக்கூடைக்குள் அதை ஒட்டினால் பழுப்பது தாமதமாகும். நிறைய பழங்களை வாங்கி வரும்போது அனைத்தும் ஒன்றாகப் பழுத்து அழுகிப்போவதைப் பார்க்கலாம். எனவே தேவையானவற்றை மட்டும் பழுக்க வைத்துவிட்டு, மற்றவற்றை தாமதமாகப் பழுக்க வைக்க இந்த ஸ்டிக்கர் உதவும். அதன் விலை இரண்டு ரூபாய். அது இப்போது சந்தையில் கிடைப்பதில்லை. அதைக் கிடைக்கும்படி செய்வது தொழில்முனைவோரின் பங்கு.
ஏன் பலரும் தொழில்முனைவோராக விரும்புவதில்லை?
வேலை வாய்ப்பு பாதுகாப்பானது. முதல் தேதியன்று சம்பளம் கிடைத்துவிடும். தொழில்முனைவோராக நிச்சயமற்ற தன்மைகளையும், நிறைய போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
பெண்கள் இணைந்து ஒரு பணியைச் செய்ய முடியாது என்கிற கருத்து தொன்று தொட்டு நிலவுகிறதே, இதுபற்றி உங்கள் கருத்து?
இக்கருத்து முற்றிலும் தவறானது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் வெற்றிகரமாக ஒன்று சேர்ந்து பல சிறு தொழில்களைச் செய்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொண்டிருப்பதே இதற்குச் சான்று.
தொழில்முனைவோராக பலரையும் மாற்றுவதற்கு நீங்கள் ஊக்கப்படுத்துவதாகச் சொல்கிறீர்களே, அதற்கு பணம் தேவையாயிற்றே. அதை எவ்வாறு அடைவது?
தொழில்முனைவோராக மாறுவதற்கு புதிய யோசனை பணத்தைக் காட்டிலும் முக்கியம். கருத்தும், கனிவும், துணிவும், விடாமுயற்சியும் இருப்பவர்கள்தாம் வெற்றி பெற முடியும். நல்ல திட்டம் கையிலிருந்தால் தாராளமாக நிதி வசதி கிடைக்கும். தொழில்முனைவோர் ஆகும் முயற்சி 100 மீட்டர் ஓட்டப் பந்தயமல்ல, மாரத்தான் ஓட்டம் என்பதை மனதில் வைக்க வேண்டும்.
புதிதாகச் சிந்தித்தால்தான் தொழில்முனைவோர் ஆக முடியுமா?
ஏற்கனவே உள்ள தொழிலையும் சற்று வித்தியாசமாகச் செய்தால் வெற்றி நிச்சயம். பல பல்கலைக்கழகங்களில் ஆய்வு நிலையில் இருப்பவற்றை மக்களுக்குக் கொண்டுபோய் சேர்த்தால் போதும், வெற்றி கிடைத்துவிடும்.
பெண்கள் தொழில்முனைவோராவதில் என்ன நன்மை?
நிறைய பெண்கள் படித்து முடித்துவிட்டு குடும்பச் சூழலின் காரணமாக பணிக்குச் செல்லாமல் இருந்து விடு கிறார்கள். பிள்ளைகள் பராமரிப்பு வயதைக் கடந்ததும் அவர்களுக்குப் பொழுது போகாமல் அயர்ச்சி ஏற்படுகிறது. முழுநேரம் பணியாற்றாமல் விரும்பும்போது பணியாற்ற தொழில்முனைவோராவது உதவும். அவர்கள் அறிவையும், ஆற்றலையும் சமூகம் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
புதிதாகத் தொழில் தொடங்கினால் வாடிக்கையாளர்களைக் கவர அதிக அளவில் விளம்பரம் செய்ய வேண்டுமே?
விளம்பரங்கள் தேவை என்பதை மறுக்க முடியாது. ஆனால், விளம்பரங்களால் மட்டுமே வியாபாரம் பெருகி விடாது. பொருளின் தரமே சிறந்த விளம்பரம். பயன் பெற்றவர்கள் மூலம் கிடைக்கும் வாய்மொழி விளம்பரமே உயர்ந்த நம்பகத்தன்மை வாய்ந்தது.
பலர் தொழில் தொடங்கி தோல்வியடைந்து விடுகிறார்களே...
அனுபவம் என்பது நாம் பெற்ற தோல்விகளின் எண்ணிக்கையை வைத்தே கணக்கிடப்படுகிறது. தோல்வி தொழில் அனுபவத்தில் சகஜம். அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்பவர்கள் சின்ன தோல்வியை சந்தித்து பெரிய வெற்றியை உருவாக்கிக்கொள்கிறார்கள்.
பெண்கள் தொழில்முனைவோராவதற்கு அனுபவம் தேவையாயிற்றே...
ஏதேனும் ஒரு பணியில் அனுபவம் பெற்றிருந்தால் தொழில்முனைவோராகும்போது சரியாகத் திட்டமிட்டு அதை செவ்வனே செய்ய முடியும். வேறு வகையில் அனுபவம் சார்ந்தவர்களோடு இணைந்து பணியாற்றும்போதும் அது சாத்தியம். எல்லாவற்றிலும் அனுபவமடைந்த பிறகுதான் ஈடுபட வேண்டும் என்கிற நியதியில்லை.
ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பதாகச் சொல்கிறார்களே, அது தொழில் முனைவோராக மாறுவதிலும் இருக்கிறதா?
பல தொழில்முனைவோருக்கு பெண்கள் மனைவியாகவும், மகளாகவும், தாயாகவும் ஊக்கசக்தியை வழங்கியிருக்கிறார்கள். ஆபூர்வ ஷா என்பவர் மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது அவருக்கு முன்னால் அழகான கூந்தல் கொண்ட ஒரு பெண் நடந்து போவதைப் பார்த்து அந்தக் கூந்தலில் தன்னை யிழந்து ‘திருமணம் செய்தால் இவரைத்தான் செய்வேன்' என்று பகிரங்கமாகச் சொல்லி நேசிக்கவும் செய்தார். அவருடைய நேசிப்பிற்குரிய பெண் தன் தோழிக்கு கூந்தல் கொட்டுகிறது என்று சொன்னபோது அதை சரி செய்ய கூந்தல் ஆரோக்கியத் தைலத்தை உருவாக்கி வெற்றி பெற்றார். இது வெற்றிக்குப் பின்னால் நின்ற பெண்ணால் அல்ல, அழகிய கூந்தலுடன் முன்னால் சென்ற பெண்ணால் ஏற்பட்டது.
வெற்றிகரமான தொழில்முனைவோராகுவதற்கு கடின உழைப்பு ஒன்று போதுமா?
கடின உழைப்பு முக்கியம். கடிகாரத்தைப் பார்த்து வேலை செய்பவர்கள் கடன்காரர்கள். வாடிக்கையாளர்களின் திருப்தியைக் குறிவைத்து பணியாற்றுபவர்களே முதலாளிகள். எனவே, நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றுவது அவசியம். அதே நேரத்தில், நேர மேலாண்மையும் முக்கியம். அட்டவணை தயாரித்து ஒரு பணியும் விடுபடாமல் செய்து முடிப்பதோடு எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நுணுக்கத்தோடு செயல்படுவதும் அவசியம்.
தொழில்முனைவோராக பெண்கள் மலர்வதற்கு எது முக்கியத் தேவை?
பிரகாஷ் ஐயர் என்பவர் இந்தியாவில் வெற்றி பெற்ற முதல் தலைமுறை தொழில்முனைவோரைப்பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதில் உஷா என்கிற பெண் தொடங்கிய ‘யெ சைனா’ என்கிற அமைப்பைப்பற்றி எழுதியிருக்கிறார். அந்தப் பெண்மணி புற்றுநோய் தனக்கு வந்து விடுமோ என்ற பயத்தில் தடுமாறியவர். திருமணத்திற்குப் பிறகும் அச்சம் தொடர்ந்தது. எதிர்மறைச் சிந்தைனயைத் தவிர்க்க ஆக்கபூர்வமான செயல்பாடே அடித்தளம் என்ற அடிப்படையில் அவர் கணவர் சீன மொழியைக் கற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்தார். இன்று அவர் பலருக்கும் சீனம் சொல்லிக் கொடுக்கும் ‘யெ சைனா’ என்கிற அமைப்பை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். நமக்கு ஒன்று வரவில்லை என்பதால் எதுவும் வராது என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை. நாம் சாதிக்க முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டால் பெண்கள் தொழில்முனைவோராக மலர முடியும்.
நல்ல தொழில்முனைவோருக்கு இலக்கணம் எது?
‘நான்’ என்ற எண்ணம் மறைந்து ‘நாம்’ என்ற எண்ணம் உண்டாக வேண்டும். நம்மைக் காட்டிலும் வாடிக்கையாளர் முக்கியம். சில நிறுவனங்கள் வாடிக்கையாளரே வி.வி.ஐ.பி. என்கிற முழக்கத்தை முன்வைக்கின்றன. ஒரு ரூபாய்க்கு பொருள் கேட்டு வருகிறவரையும், ஒரு லட்ச ரூபாய்க்கு பொருள் கேட்டு வருகிறவரையும் சம மரியாதையோடு நடத்துவது அவசியம். இன்று ஒரு ரூபாய்க்கு வாங்குபவர் நம் நடத்தையில் மகிழ்ந்து நாளை ஒரு லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் செய்ய வரலாம்.
பெண்களுக்காக நீங்கள் பிரத்யேகமான தொழில் முனைவோர் பயிற்சிகள் நடத்துகிறீர்களா?
பெண் தொழில்முனைவோருக்கு நிதி மேலாண்மைப் பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுற்றுலாத்தலங்களில் பெண்களுக்கான சிறு தொழில்கள் மூலம் வாழ்வாதாரப் பயிற்சி, உயிர் தொழில்நுட்பத்தில் தொழில்வாய்ப்புப் பயிற்சி போன்ற பயிற்சிகள் பெண்களுக்காகவே அளிக்கப்படுகின்றன. விரைவில் தமிழ்நாடு முழுவதும் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்களை பெண்களுக்காக மட்டுமே நடத்த உள்ளோம். அதில் அக்கறை காட்டு பவர்களுக்கு தொடர்ந்து தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி அவர்களை நிறுவனங்கள் நடத்தி நிமிர்ந்து நிற்கச் செய்யவிருக்கிறோம்.
ஐம்பது, அறுபது பெண்கள் ஒன்று சேர்ந்து பயிற்சி அளிக்கும்படி விண்ணப்பித்தால் நீங்கள் அவர் களுக்கு உதவுவீர்களா?
இப்படிப்பட்ட ஆர்வம் அவர்களிடம் துளிர்விட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. அவர்கள் வந்தால் உடனடியாகப் பயிற்சி அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இப்போது தனிப்பட்ட தொலைபேசி விசாரிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.
உங்கள் ஆலோசனைப்படி ஒரு பெண் தொழில் தொடங்கினால் எந்த விதத்தில் வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்தாசைபுரிவீர்கள்?
முதலில் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்திற்கேற்ப தொழிலைத் தேர்ந்தெடுக்க உதவுவோம். பின்னர் திட்ட அறிக்கையைத் தயாரிக்க வழிகாட்டுவோம். அவர்கள் தயாரிக்கும் திட்ட அறிக்கையைச் செப்பனிட்டு அளிப்போம். அவர்கள் கடனுதவி பெற ஆலோசனைகள் வழங்குவோம். அவர்களுக்காக உள்ள திட்டங்களை எடுத்துச் சொல்வோம். பிறகு அவர்களை வழிநடத்துபவர் ஒருவரை அமைத்துக் கொடுப்போம். வெற்றிகரமாக தொழில் நடக்கும் வரை அவர்கள் சுண்டுவிரலைப் பிடித்து அழைத்துச் செல்லவும், பிறகு சுட்டுவிரலைக் காட்டி பாதையை உணர்த்தவும் எங்கள் உதவி எப்போதும் உண்டு. எங்கள் அலுவலகம் சென்னை கிண்டி தொழிற் பேட்டை அமைந்திருக்கும் ஈக்காட்டுதாங்கல் பார்த்தசாரதி கோவில் தெருவில் அமைந்துள்ளது.
இன்றிருக்கும் சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வில் பெண்கள் குழுவாகச் சேர்ந்து சிறப்பாக ஒரு தொழிலைச் செய்ய எண்ணினால், எதை பரிந்துரைப்பீர்கள்?
இன்று பொது மக்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. தமிழக அரசு நெகிழியை பயன்பாட்டிலிருந்து அகற்றும் அறிவிப்பை வெளியிட்ட பிறகு இது குறித்த பிரக்ஞை கூடியிருக்கிறது. நெகிழிக்கு மாற்றாக ஏதேனும் வேறு பொருளை உபயோகப்படுத்த முடியுமா என்ற கருத்தரங்குகள் தமிழகமெங்கும் நடந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் ‘பசுமை நிகழ்வு’ என்ற முயற்சியை பெண்கள் குழுவாகச் சேர்ந்து மேற்கொள்ளலாம். உதாரணமாக, திரு மணம் என்று எடுத்துக்கொண்டால் அங்கு நெகிழியே பயன்பாட்டில் இல்லாதவாறு ஏற்பாடுகளைச் செய்வது. வாழையிலை, கண்ணாடிக் குவளைகள் அல்லது பித்தளைப் பாத்திரங்கள், பனை ஓலை அலங்காரங்கள், தென்னை ஓலைத் தோரணங்கள் என்று அனைத்துமே சுற்றுச்சூழலுக்கு இணக்கமான பொருட்களாகப் பயன்படுத்துவது. தட்டைச் சுத்தப்படுத்தி பந்திக்குப் பயன்படுத்துவது. இவ்வாறு செய்தால் பெண்கள் குழுவிற்கு வேலை கிடைப் பதோடு மக்காத பொருட்களைப் பயன்படுத்தும் நிலை மாறி மண் வளப்படும்.
நெகிழிக்கு மாற்றாக பைகளைத் தயாரிக்கும்போது மேற்கொள்ள வேண்டிய முக்கிய காரணிகள் எவை?
பல கல்லூரிகளும், ஆய்வகங்களும் இது குறித்து பல கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கின்றன. அரிசிக் கஞ்சியிலிருந்து பை தயாரிப்பது, மக்காச் சோளத்திலிருந்து ஸ்பூன்கள் செய்வது, வாழைத்தண்டிலிருந்து பைகள் தயாரிப்பது போன்றவை எங்களிடம் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. நெகிழிக்கு மாற்றாக ஒன்றைக் கொண்டுவரும்போது மூன்று முக்கியக் காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும். நெகிழியைப்போல அது காசில்லாமல் கிடைக்குமா என்பது கருத்தில் கொள்ள வேண்டிய முதல் கூறு. இரண்டாவதாக, பெருமளவில் எல்லா இடங்களிலும் கிடைக்குமளவு உற்பத்தி செய்ய முடியுமா என்பது. மூன்றாவது, அது நெகிழியைப்போல தாக்குப்பிடிக்கக் கூடியதா என்பது. இம்மூன்றையும் பூர்த்தி செய்யுமளவு ஒரு பொருளை கண்டுபிடிப்பது ஆய்வகங்களின் இலக்காக இருக்க வேண்டும். அதை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது தொழில்முனைவோரின் பணியாக இருக்க வேண்டும். அதுவரை, இந்நேர்வில் நெகிழி பயன்பாட்டுக்கு வரும் முன்பு நாம் என்ன செய்தோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். துணிப்பையை எடுத்துக்கொண்டு காய்கறி வாங்கச் சென்றோம். பால் வாங்க சொம்பு கொண்டு சென்றோம். இப்போது கைவீசிச் செல்ல ஆசைப்படுகிறோம். அதுதான் பிரச்சினை. எனவே சோம்பலுக்கு விடை கொடுப்பதுதான் சரியான தீர்வு. துணிப்பைகளை திருப்பூர் போன்ற இடங்களில் பனியன் கழிவுகளைக் கொண்டு பெருமளவு தைத்து புழக்கத்திற்குக் கொண்டு வரலாம்.
Related Tags :
Next Story