வெளிச்சத்தை இழந்த விழிகளும்.. துணிச்சலால் பெற்ற வெற்றிகளும்..
மும்பை உல்லாஸ் நகரில் பிறந்தவர், பிராஞ்சால் பாட்டீல். பார்வையற்றவர். இவர் யூ.பி.எஸ்.சி. பரீட்சை எழுதி, ‘இந்தியன் ரெயில்வே அக்கவுண்ட் சர்வீஸ்’ பணிக்கு தேர்வானதும், இவரது குடும்பமே மகிழ்ச்சியில் ஆனந்தக்கூத்தாடியது.
மும்பை உல்லாஸ் நகரில் பிறந்தவர், பிராஞ்சால் பாட்டீல். பார்வையற்றவர். இவர் யூ.பி.எஸ்.சி. பரீட்சை எழுதி, ‘இந்தியன் ரெயில்வே அக்கவுண்ட் சர்வீஸ்’ பணிக்கு தேர்வானதும், இவரது குடும்பமே மகிழ்ச்சியில் ஆனந்தக்கூத்தாடியது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அவருக்கு பார்வையில்லாததை காரணங்காட்டி அவரது பணி வாய்ப்பை நிராகரித்துவிட்டார்கள். வேலையில் சேர முடியாத சோகம் தன்னை தாக்கினாலும், அவர் துவண்டு போய் உட்கார்ந்துவிடவில்லை.
முன்பைவிட சிறப்பாக படித்து, மீண்டும் அதே சிவில் சர்வீசஸ் பரீட்சையை எழுதினார். தேர்வு முடிவு அவருக்கு நிரந்தர மகிழ்ச்சியை கொடுத்தது. தேசிய அளவில் 124-வது இடத்தைப் பிடித்து, பயிற்சிகளை பெற்று இப்போது கொச்சியில் துணை கலெக்டராக வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார். இவரிடம் பார்வையின்மையை பற்றி கேள்வி கேட்டால், “இருட்டால் எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை” என்கிறார்.
“பரீட்சையில் எனது திறமையை நிரூபித்து வெற்றி யடைந்த பின்பும், பார்வையின்மையை காரணங்காட்டி வேலை மறுக்கப்பட்டதும் நான் மிகுந்த கோபம் அடைந்தேன். ஆனால் நான் தோற்றுப்போக தயாராக இல்லை. கூடுதல் முயற்சி செய்து முன்பைவிட பெரிய வெற்றியை பெறவேண்டும் என்று பிடிவாதம் காட்டினேன்.
சிறுவயதிலே எனக்கு ‘ரெட்டினா டிட்டாச்டு’ பாதிப்பு இருந்தது. அதனால் மிகுந்த எச்சரிக்கையோடு பயணம் மேற்கொள்ளும்படி டாக்டர்கள் சொன்னார்கள். சூரிய ஒளி கண்களில் பட்டுவிடக்கூடாது என்று சொன்னார்கள். எங்கும் நிறைந்திருக்கிற சூரியனில் இருந்து என் கண்களை எப்படி பாதுகாப்பது என்று தெரியவில்லை. அதனால் ஐந்து வயதிலே ஒரு கண்ணின் பார்வை பறிபோனது. பாதி இருட்டோடு நான் வீட்டிலே இருந்து வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தபோது, எனது நண்பன் விளையாட்டுக்கு ஸ்கேலை எடுத்து என் கண்களில் வீசினான். பார்வையுள்ள கண்ணில் அடிபட்டது. ஆனாலும் நான் அதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாமல், படுக்கைக்கு சென்று ஆழ்ந்து தூங்கிவிட்டேன். தூக்க இருட்டில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. விடிந்தது. ஆனால் அந்த விழியும் வெளிச்சத்தை காணும் சக்தியை இழந்திருந்தது.
என் இரண்டு கண்களும் பார்வையை இழந்த பின்புதான் நான் ஆறாவது வயதில் படிப்பதற்காக பள்ளிக்கு சென்றேன். மும்பையில் உள்ள பார்வையற்றவர் பள்ளியில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பிரெய்லி முறையில் படித்தேன்” என்கிறார்.
பத்தாம் வகுப்பு வரை இயல்பாக சென்று கொண்டிருந்த இவரது படிப்பில், பிளஸ்- ஒன் படிக்கும்போது புதிய பிரச்சினை தோன்றியிருக்கிறது.
“அங்கு நான் பிளஸ்-ஒன் படிக்க விரும்பிய பள்ளியில் பிரெய்லி வடிவிலான பாடத்திட்டம் இல்ைல. அதனால் சக மாணவிகளின் புத்தகத்தை வாங்கித்தான் படிக்க வேண்டியதிருந்தது. நான் பள்ளியில் இருந்து பாடப்புத்தகங்களை வாங்கிவந்து என் அம்மா ஜோதி பாட்டீலிடம் கொடுப்பேன். நான் படிக்க வேண்டிய பாடங்களை எல்லாம் அம்மா படித்து எனக்கு விளக்குவார். அதை நான் மனதில் பதியவைத்துக்கொள்வேன். இப்படித்தான் என் படிப்பு தொடர்ந்தது.
அந்த காலகட்டத்தில் தினமும் அம்மாதான் என்னை பள்ளிக்கு கூட்டிச்செல்வார். கூடவே இருந்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவார். வந்த உடன் அவசர அவசரமாக வீட்டு வேலைகளை பார்ப்பார். பி்ன்பு எனக்கு படித்து தருவார். அவர் ஆங்கில பாடம் படித்து தந்ததன் மூலம் என்னைவிட நன்றாக ஆங்கிலம் பேசத் தொடங்கிவிட்டார்.
அடுத்து மும்பை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் அரசியல் விஞ்ஞானத்திற்கான பட்டப்படிப்பில் சேர்ந்தேன். அப்போது எனக்கான விசேஷ கம்ப்யூட்டரில் படிக்கத் தொடங்கிவிட்டேன். கம்ப்யூட்டர் வழியாக கற்றது எனக்கு படிப்பை எளிதாக்கிவிட்டது. அம்மா வாசிப்பதற்கு பதில் கம்ப்யூட்டரே எனக்கு வாசித்து தந்தது. பின்பு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில். படித்தேன்..” என்கிறார்.
ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் ஆர்வம் இவருக்கு எப்படி வந்தது?
“நான் ஒரு நாள் கல்லூரி நூலகத்தில் இருந்து படித்துக்கொண்டிருந்தபோது எனது தோழி சிவில் சர்வீசஸ் ேதர்வுகள் பற்றி எனக்கு சொன்னாள். அதையும் முயற்சித்து பார்க்கலாமே என்று தோன்றியது. அதற்காக புத்தகங்களை குடும்பத்தினர் தேடிப்பிடித்து வாங்கித் தந்தார்கள். அவைகளை ஸ்கேன் செய்து, பின்பு சாப்ட்வேர் உதவியோடு ஒலி வடிவிலாக்கி கேட்டு, படித்தேன். ஆனால் எழுத்துத் தேர்வில் நான் சொல்லச் சொல்ல எழுதுவதற்கு ஒரு ‘ஸ்கிரைப்’ தேவைப்பட்டார். விதுஷ் என்ற நண்பர் அந்த உதவியை செய்தார். நான் சொல்லும் வேகத்திற்கு ஈடுெகாடுத்து அவர் எழுதினார். எல்லாம் முடிந்து, தேர்வு முடிவு வந்த பின்பு, ரெயில்வே துறை வேலை எனக்கு ஏமாற்றத்தை தந்தது. முழுவதுமாக பார்வையில்லாதவர்களுக்கு ரெயில்வேயில் வேலை தரமாட்டார்கள் என்பது அதன் பின்புதான் தெரிந்தது.
அதனால் நான் மனந்தளர்ந்து போயிருந்தபோது நிறைய பேர் எனக்கு ஆறுதலும், தேறுதலும் தந்தார்கள். நானும் பல்வேறு தலைவர் களின் வாழ்க்கை வரலாற்றை படித்தேன். அதில் நெல்சன் மண்டேலா ‘லாங் வாக் டூ பிரீடம்’ என்ற புத்தகத்தில் தனது 27 ஆண்டு கால சிறை வாழ்க்கையை பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர் தான் அடைக்கப்பட்டிருந்த ஜெயில் அறையை மகிழ்ச்சியோடு கழுவி சுத்தம் செய்ததாகவும், தனது துணிகளை எல்லாம் உற்சாகத்தோடு துவைத்ததாகவும் எழுதியிருக்கிறார். அந்த வரிகள் என் உணர்வுகளைத் தொட்டது. ஜெயிலில் அடைபட்டுக் கிடந்தவருக்கு அந்த சின்னச்சின்ன வேலைகள் அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறதே என்று வியந்தேன். அப்போதுதான் நாம் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் நமக்குரிய சந்தோஷத்தை சின்னச்சின்ன விஷயங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்பதை உணர்ந்தேன்.
அது போன்ற சந்தோஷத்தை பெற நாம் ஏதாவது செய்துகொண்டே இருக்கவேண்டும் என்று நினைத்து, எனது மகிழ்ச்சிக்காகத்தான் மீண்டும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினேன். முதலில் பெருமளவு பின்தங்கி போனதால்தானே ரெயில்வே பணி கிடைத்தது. மீண்டும் தேர்வு எழுதி முன்னணி இடத்தை பிடிக்கவேண்டும் என்று முடிவு செய்தேன்.
நான் ஐ.ஏ.எஸ். ஆகிவிட்ட தேர்வு முடிவு வெளியானபோது டெல்லியில் இருந்தேன். தேர்வு முடிவை தெரிந்து என் பெற்றோர் அழுது விட்டார்கள் என்று அறிந்தேன். அவர்களோடு சேர்ந்து நானும் ஆனந்த கண்ணீர் வடிக்க உடனே மும்பை வந்தேன். அந்த நிமிடங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவை. ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாரானபோது இந்தியா முழுவதும் உள்ள பிரச்சினைகளை பற்றி படித்தேன். கொச்சியில் அவ்வளவு பிரச்சினைகள் இல்லை. என் வேலையை இங்கு நிறைவாக செய்து கொண்டிருக்கிறேன்” என்கிறார், பிராஞ்சால் பாட்டீல்.
Related Tags :
Next Story