52 வயது அதிரடி ராணி!
நீச்சல், சைக்கிள் பயணம், மாரத்தான் ஓட்டபந்தயம் ஆகிய மூன்றையும் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் டிரையத்லான் போட்டியில் 52 வயதாகும் அஞ்சு கோஷ்லா பங்கேற்று அசத்தியிருக்கிறார்.
நீச்சல், சைக்கிள் பயணம், மாரத்தான் ஓட்டபந்தயம் ஆகிய மூன்றையும் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் டிரையத்லான் போட்டியில் 52 வயதாகும் அஞ்சு கோஷ்லா பங்கேற்று அசத்தியிருக்கிறார். இதன் மூலம் இந்த போட்டியில் பங்கேற்ற வயதான இந்திய பெண்மணி என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார். இவர் 3.86 கிலோ மீட்டர் தூரம் நீச்சலும், 180.25 கிலோ மீட்டர் சைக்கிள் பயணமும், 42.2 கிலோ மீட்டர் மாரத்தான் பந்தயமும் இடைவிடாமல் தொடர்ச்சியாக மேற்கொண்டிருக்கிறார்.
இது இளைஞர்களுக்கே சவால் விடும் தூரமுள்ள போட்டி என்பதால் இதற்கு ‘இரும்பு மனிதர் டிரையத்லான்’ என்று பெயர். ஆஸ்திரியாவின் கரிந்தியா என்ற இடத்தில் நடந்த போட்டியில் அஞ்சு கோஷ்லா பந்தய தூரத்தை முழுமையாக கடந்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி யிருக்கிறது. இவர் 15 மணி 54 நிமிடம் 54 நொடிகளில் போட்டியை நிறைவு செய்திருக்கிறார், அஞ்சு டெல்லியை சேர்ந்தவர்.
‘‘எனது குடும்பத்தினர் அனைவருமே உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். உடல் ஆரோக்கியமும், கட்டுக்கோப்பும் நமக்கு மிக அவசியம். கடந்த 10 ஆண்டுகளாக நான் உடல் நலனில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். பெரும்பாலான பெண்கள் இதுபோன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கு 30 முதல் 35 வயதுதான் சரியானதாக இருக்கும். எனக்கு வயது அதிகமாக இருந்ததால் போட்டிக்கு ஏற்ப உடலை வலுப்படுத்துவதற்கு பலகட்ட பயிற்சிகளில் ஈடுபட்டேன்.
நான் பள்ளி பருவத்தில் தடகள போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்றேன். அந்த உத்வேகம்தான் என்னை திடப்படுத்தியது. 10 ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நெடுந்தொலைவுக்கு செல்வதற்கு சிரமப்பட்டேன். பொறுமைதான் என்னை சைக்கிள் ஓட்ட பழக்கியது. ஜோத்பூரில் இருந்து ஜெய்சால்மர் வரை 500 கிலோ மீட்டர் தொலைவை 24 மணி நேரத்தில் கடந்தேன். அது கொடுத்த ஊக்கத்தில் 200 கிலோமீட்டர், 300 கிலோமீட்டர், 400 கிலோமீட்டர் பந்தயங்களில் பங்கேற்றேன். அதோடு ஓட்டப்பந்தய பயிற்சியும் பெற்றேன். டெல்லியில் நடந்த மாரத்தான் போட்டியிலும் பங்கேற்றேன். 2013-ம் ஆண்டு குறைந்த தூரம் கொண்ட டிரையத்லான் போட்டியில் பங்கேற்றேன். அதுதான் என் முதல் போட்டி. அதில் கிடைத்த அனுபவம் கொழும்பில் நடந்த அடுத்த கட்ட டிரையத்லானில் பங்கேற்க வைத்தது. இப்போது இந்த போட்டியை முழுமையாக நிறைவு செய்து சாதனை படைத்திருக்கிறேன்’’ என்கிறார்.
ஆஸ்திரியாவில் நடந்த இந்த போட்டியில் 2761 பேர் பங்கேற்றிருக்கிறார்கள். அதில் 2315 பேர் போட்டியை முழுமையாக நிறைவு செய்திருக்கிறார்கள். அஞ்சு கோஷ்லா 38-வது நபராக வந்திருக்கிறார். 52 வயதில் போட்டி தூரத்தை முழுமையாக நிறைவு செய்ததே இவரது சாதனை.
Related Tags :
Next Story