ஆரணியில் தொழிலாளியை கத்தியால் வெட்டிய வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது
களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுமுருகன், வாசுதேவனின் மனைவி விஜயலட்சுமி (30) ஆகியோரை கைது செய்தனர்.
ஆரணி, ஜூலை.16–
ஆரணியை அடுத்த சம்புவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 32), நெசவு தொழிலாளி. இவரது மனைவி கீதா. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அண்ணன், தம்பிகளான வாசுதேவன், பிரபுமுருகன் (25) ஆகியோரின் மனைவிகளுக்கும் இடையே குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு இருந்தது. இந்த பிரச்சினை தொடர்பாக கீதா தாக்கப்பட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் முருகன் கீதாவை மருத்துவமனையில் பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வாசுதேசன், பிரபுமுருகன் ஆகியோர் சேர்ந்து முருகனை கத்தியால் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த முருகன் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுமுருகன், வாசுதேவனின் மனைவி விஜயலட்சுமி (30) ஆகியோரை கைது செய்தனர். மேலும் வாசுதேவனை தேடி வருகின்றனர்.