ஓசூரில் மாயமான அடகு கடை உரிமையாளர் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு


ஓசூரில் மாயமான அடகு கடை உரிமையாளர் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 16 July 2018 5:00 AM IST (Updated: 16 July 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் மாயமான அடகு கடை உரிமையாளர் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். தனது சாவுக்கு காரணமானவர் யார் என பெயரை வாட்ஸ் அப்பில் வெளியிட்டு அவர் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓசூர்,


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எம்.ஜி. ரோட்டை சேர்ந்தவர் ஹேமந்த்குமார் சோனி (வயது 51). இவர் அந்த பகுதியில் நகை அடகு கடை நடத்தி வந்தார். இவருக்கு கைலாஷ் என்ற மகனும், தீபிகா சோனி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் கைலாஷ் தனியாக நகை அடகு கடை நடத்தி வருகிறார். தீபிகா சோனி தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

ஹேமந்த்குமார் சோனி நேற்று முன்தினம் மாலை கடையை பூட்டி விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது மோட்டார்சைக்கிள் ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் அருகில் கண்டெடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மகள் தீபிகா சோனி இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.


இந்த நிலையில் நகை அடகு கடை உரிமையாளர்கள் அசோசியேசனின் வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் ஹேமந்த் குமார் சோனி பெயரில் குறுந்தகவல் (மெசேஜ்) ஒன்று வந்தது. அதில் தனது சாவிற்கு எம்.ஜி. ரோட்டில் அலுமினியம் கம்பெனி நடத்தி வரும், மங்கல் என்பவர் தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் ஹேமந்த் குமார் சோனியை அவரது உறவினர்கள், போலீசார் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கெலமங்கலம் - ஓசூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே, ரெயிலில் அடிபட்டு இறந்த நிலையில், நேற்று காலை ஹேமந்த்குமார் சோனி பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் ரெயில்வே போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஹேமந்த் குமார் சோனி தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரது மரணம் தொடர்பாக மங்கல் என்பவரிடம் விசாரணை நடத்த ஓசூர் டவுன் போலீசார் முடிவு செய்துள்ளனர். ஓசூரில் மாயமான நகை அடகு கடை உரிமையாளர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story