கல்லூரி மாணவி பலியாக காரணமாக இருந்த போலி பயிற்சியாளரின் வீடு, அலுவலகத்துக்கு சீல்


கல்லூரி மாணவி பலியாக காரணமாக இருந்த போலி பயிற்சியாளரின் வீடு, அலுவலகத்துக்கு சீல்
x
தினத்தந்தி 16 July 2018 4:15 AM IST (Updated: 16 July 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கல்லூரி மாணவி பலியாக காரணமாக இருந்த போலி பயிற்சியாளரின் வீடு, அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்ததுடன், அவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் விராலியூரில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது. இதில் 2–வது மாடியில் இருந்து கீழே குதிக்க பயந்த மாணவி லோகேஸ்வரியை (வயது 19) பயிற்சியாளர் ஆறுமுகம் கீழே பிடித்து தள்ளினார். இதில் முதலாவது மாடியில் உள்ள ‌ஷன் சேடில் அவருடைய தலைபட்டதில் படுகாயம் அடைந்ததில் லோகேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆலாந்துறை போலீசார், பயிற்சியாளர் ஆறுமுகம் மீது உயிரிழப்பு ஏற்படும் என தெரிந்தே மரணம் ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்த எவ்வித பயிற்சியும் பெறவில்லை என்பதும், அவர் வைத்திருந்த சான்றிதழ் போலியாக தயாரிக்கப்பட்டதும் தெரியவந்தது.

மேலும் அவர் தமிழகம் முழுவதும் கடந்த 6 ஆண்டுகளாக 1,425 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தி வந்ததும் இதன் மூலம் ரூ.2½ கோடி மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது கூடுதலாக மோசடி செய்தல் என்ற பிரிவின் கீழ் ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

அவர் மோசடி செய்துள்ள பணத்தை எங்கு வைத்துள்ளார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சென்னையில் உள்ள ஒரு வங்கி மற்றும் தபால் நிலையத்தில் டெபாசிட் செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. எனவே அந்த பணத்தை மீட்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

ஆறுமுகத்திற்கு உதவி செய்தது யார்? இதன் பின்னணியில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்த கோவை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனிதா மேற்பார்வையில் பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், கோவை மத்திய சிறையில் இருக்கும் ஆறுமுகத்தை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் கோவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தனிப்படையை சேர்ந்த போலீசார் கூறியதாவது:– போலி பயிற்சியாளரான ஆறுமுகம் சென்னை கேளம்பாக்கம் ரோட்டில் உள்ள மாம்பாக்கத்தை சேர்ந்தவர். அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தில் ஏராளமான போலி சான்றிதழ்களை பதுக்கி வைத்து இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அவர் கைதானபோது அவருடைய வீட்டை சோதனை செய்யலாம் என்று நினைத்தோம். ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால் சோதனை செய்ய முடியவில்லை.

தற்போது ஆறுமுகம் சிறையில் இருப்பதால், அவருக்கு நெருங்கியவர்கள் ஆறுமுகத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் போலியான சான்றிதழ்கள் இருந்தால் அதை எடுத்துச்செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே அவருடைய வீடு மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது.

ஆறுமுகத்தை போலீஸ் காவலில் எடுத்த பின்னர், அவரை சென்னை அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளோம். அதுபோன்று அவருக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தது சென்னையை சேர்ந்த ஒரு கும்பல் என்பது தெரியவந்து உள்ளது. எனவே அந்த கும்பலில் எத்தனை பேர் உள்ளனர்? அவர்கள் யாருக்கு எல்லாம் இதுபோன்று போலி சான்றிதழ்களை தயாரித்து கொடுத்து உள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆறுமுகத்துக்கு ஒரு தொண்டு நிறுவனம் உதவி செய்து வந்ததாக கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் விசாரித்து வருகிறோம். முதற்கட்ட விசாரணையில் அவர் போலி சான்றிதழ் பெற்று பயிற்சி நடத்தி வருவது தெரியாமல் அந்த நிறுவனம் உதவி செய்து வந்தது தெரியவந்து உள்ளது. எனினும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story