பொள்ளாச்சியில் தொடர் மழை காரணமாக 2 வீடுகள் இடிந்தது மரக்கிளை முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
பொள்ளாச்சியில் தொடர் மழைக்கு 2 வீடுகள் இடிந்து விழுந்தன. மரக்கிளை முறிந்து விழுந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழை அவ்வப்போது சாரலாகவும், சில நேரங்களில் சூறாவளி காற்றுடனும் பெய்து வருகிறது. நேற்று அதிகாலை பலத்த காற்றுடன் பெய்த மழையில் பொள்ளாச்சி நகராட்சி 36–வது வார்டுக்கு உட்பட்ட அமைதிநகரில் கூலித்தொழிலாளி சரஸ்வதி (வயது 60) என்பவரின் வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்தது. அப்போது, அவர் வேறு ஒரு அறையில் தூங்கிக்கொண்டு இருந்ததால் காயமின்றி உயிர் தப்பினார்.
இதேபோல், அமைதி நகரில் வசித்து வரும் கூலித்தொழிலாளி சுப்பம்மாள் (70) என்பவரது வீடும் பலத்த மழைக்கு தாக்குபிடிக்காமல் இடிந்து விழுந்தது. மரக்கிளை முறிந்து விழுந்தது. பொள்ளாச்சி–பல்லடம் மெயின்ரோடு கேரள சமாஜம் அருகில் நேற்று காலை 10 மணி அளவில் மழை மற்றும் காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வேப்ப மரத்தின் கிளை முறிந்து ரோட்டில் விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டிகள் காயமின்றி தப்பினர். முறிந்து விழுந்த மரக்கிளையை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அப்புறப்படுத்தினார்கள்.
மரக்கிளை முறிந்து விழுந்தது காரணமாக பல்லடம் ரோட்டில் 20 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். வீடு இடிந்தது தொடர்பாக வருவாய் துறையினர் சரஸ்வதி, சுப்பம்மாள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். மழைக்கு இடிந்த வீட்டை சீரமைக்க அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை சேதம் குறித்து வருவாய்த்துறையினர் தொடர்ந்து கணக்கெடுக்கும் பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.