வெந்நீரில் தவறி விழுந்த 2 வயது பெண் குழந்தை சாவு


வெந்நீரில் தவறி விழுந்த 2 வயது பெண் குழந்தை சாவு
x
தினத்தந்தி 16 July 2018 3:30 AM IST (Updated: 16 July 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே வெந்நீரில் தவறி விழுந்த 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.

விக்கிரவாண்டி,

விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகே உள்ள ஆத்திக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு தேவஸ்ரீ (வயது 2) என்ற பெண் குழந்தை இருந்தது.

இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தை தேவஸ்ரீயை குளிக்க வைப்பதற்காக ஒரு பாத்திரத்தில் சாந்தி வெந்நீர் போட்டார். பின்னர் அந்த வெந்நீர் பாத்திரத்தை அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைத்து விட்டு வெளியே சென்றிருந்தார்.

அந்த சமயத்தில் அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தை தேவஸ்ரீ எதிர்பாராதவிதமாக தவறி வெந்நீர் பாத்திரத்தின் மீது விழுந்தாள். இதில் உடல் வெந்து போனதால் தேவஸ்ரீ வலி தாங்க முடியாமல் அலறி துடித்தாள்.

உடனே குழந்தையை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் குழந்தை தேவஸ்ரீ பரிதாபமாக இறந்தாள். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது காண்போரின் கல்நெஞ்சையும் உருக வைப்பதாக இருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story