காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது


காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது
x
தினத்தந்தி 16 July 2018 4:15 AM IST (Updated: 16 July 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூரில் காமராஜர் சிலைக்கு நாடார் சங்கத்தினர், காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர்,

பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட நாடார் உறவினர் முறை சங்கத்தின் தலைவர் நடராஜன் தலைமையில் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் செயலாளர் தினகர், பொருளாளர் பால்ராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், வக்கீலுமான தமிழ்ச்செல்வன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவாஜி மூக்கன், தங்கவேல், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் இந்திராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயலாளர் குணசேகரன் தலைமையில், அக்கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று விடுமுறை நாளாக இருந்தாலும் பள்ளிகளில் காமராஜர் பிறந்த தினத்தை, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், தமிழக கல்வித்துறை சார்பில் ஏற்கனவே சுற்றறிக்கை விடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

அதன்படி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவிற்கு தலைமை ஆசிரியர் சுந்தரராசு தலைமை தாங்கினார். ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். அப்போது பள்ளி வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் காமராஜர் பிறந்த நாளையொட்டி காமராஜர் பற்றிய பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, பாட்டு போட்டி உள்ளிட்டவைகள் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற முதல் மூன்று மாணவ-மாணவிகளுக்கு பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இதை போல் கல்வி வளர்ச்சி நாள் விழாவையொட்டி பெரம்பலூர் தனியார் தொடக்கப்பள்ளியில் அலங்கரிக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு மாணவ- மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தினர். துறைமங்கலம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தனியார் சிறப்பு பள்ளியிலும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது மாற்றுத்திறனாளி மாணவர்கள் காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவியும், இரு கரங்களையும் கூப்பியும் மரியாதை செலுத்தினர்.

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சமூக வலைத்தளங்களான பேஸ்புக் (முகநூல்), வாட்ஸ்-அப் களில் நிறைய பேர் காமராஜர் படத்தினை பகிர்ந்தனர். நிறைய பேர் வாட்ஸ்-அப்களில் ஸ்டேட்டஸ்களில் காமராஜர் படங்களையும், அவரை பற்றின வீடியோ காட்சிகளையும் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று விடுமுறை தினம் என்பதால் பெரம்பலூரில் உள்ள நிறைய தனியார் பள்ளிகளில் நேற்று முன்தினமே காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடினர். காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்படாத பள்ளிகளில் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. 

Next Story