மலேசியாவில் இருந்து கடத்தல்: மதுரை விமான நிலையத்தில் ரூ12 லட்சம் தங்கம் பறிமுதல்


மலேசியாவில் இருந்து கடத்தல்: மதுரை விமான நிலையத்தில் ரூ12 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 16 July 2018 3:15 AM IST (Updated: 16 July 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை,

மலேசியாவில் இருந்து கொழும்பு வழியாக மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க புலனாய்வுத்துறை உதவி கமி‌ஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை லியகத் அலிகான் மகன் அகமது கனி(வயது 33) என்பவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அதில் தங்கக் கட்டிகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அகமது கனி கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து சுங்க புலனாய்வு துறை உதவி கமி‌ஷனர் வெங்கடேஷ்பாபு கூறுகையில், “ அகமதுகனி கொண்டு வந்த பையை சோதனை செய்தோம். அதில் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் இல்லை. இருப்பினும் அவரது நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததை தொடர்ந்து மீண்டும் அவரிடம் சோதனை நடத்தினோம். அப்போது அவர் வைத்திருந்த பையில் டி.வி.க்கு பயன்படுத்தப்படும் ரிமோட் இருந்தது. அது பழுதான நிலையில் இருந்தது. பின்னர் அதனை உடைத்து பார்த்தபோது அதில் தங்கக் கட்டி இருந்தது. இதுபோல் மற்றொரு பொருளில் 3 தங்கக்கட்டிகள் என மொத்தம் 4 தங்கக் கட்டிகள் கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது. 4 தங்கக் கட்டிகளும் 400 கிராம் எடை கொண்டிருந்தது. இதன் மதிப்பு ரூ.12 லட்சத்து 11 ஆயிரத்து 600 ஆகும். அதனை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறோம்.“ என்றார்.


Next Story