பிளாஸ்டிக் கழிவுகளால் ஆபத்து: தினமும் 240 டன் குப்பைகளை மறுசூழற்சி செய்ய முடியவில்லை
பிளாஸ்டிக் கழிவுகளால் ஆபத்து ஏற்படுகிறது. நகரில் தினமும் 240 டன் குப்பைகளை மறுசூழற்சி செய்ய முடியவில்லை என்று மாநகராட்சி ஆணையாளர் அனீஷ் சேகர் கூறினார்.
மதுரை,
தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் குப்பையில்லா நகரங்களின் நட்சத்திர மதிப்பீடு குறித்த 15–வது மண்டல திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை மதுரை மடீட்சியா அரங்கில் நடந்தது. மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை செயலாளர் ஜே.பி.ரவீந்தர் தலைமை தாங்கினார்.
நகர்ப்புற விவகார அமைச்சகத்தை சேர்ந்த கோமஸ் பேஸ்டினா, சங்கமித்திரா பட்டாச்சாரியா, சக்தீஸ்வரன், பாபா அணு ஆராய்ச்சி மைய வல்லுனர் டேனியல் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
இன்றைய நகர வாழ்க்கையில் முக்கியமான சவால் திடக்கழிவு மேலாண்மையை கையாள்வது ஆகும். எவருக்கும் பிடிக்காத குப்பையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை 100 சதவீதம் அறிவியல் முறைப்படி நிர்வகிக்க வேண்டும். இதற்கு மாற்று வழி வேறு ஏதும் இல்லை. மேலும் குப்பைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 50 வருடங்களுக்கு முன்பு குப்பைகளை அவரவர் பகுதிகளிலேயே நிலத்தடியில் புதைத்து மட்க செய்து உரமாக பயன்படுத்தி விடுவார்கள். அப்போது குப்பை ஒரு பிரச்சனையாக இருந்தது இல்லை. குப்பை பொது இடங்களுக்கு வருவதில்லை.
நாகரிகத்தின் விளைவாக நகரமயமாதலால் நகரின் பரப்பளவு சுருங்கி வீடுகளாகவும், அடுக்குமாடி குடியிருப்பு களாகவும் மாறியதால் குப்பைகள் கொட்டுவதற்கு இடம் இல்லாமல் பொது இடங்களில் கொட்டப்படுகிறது. ஓவ்வொரு நாளும் எவ்வளவு குப்பைகளை உருவாக்குகிறோம் என்று யாருக்கும் தெரிவதில்லை.
தற்போது ஒரு மனிதர் சுமார் 15 முதல் 20 பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகிறார். ஒவ்வொரு நாளும் எவ்வளவு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முடியுமோ அந்த அளவிற்கு நாம் பூமித்தாயை பாதுகாக்கலாம்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்து கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது ஒரு நல்ல முடிவாகும். ஏனெனில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 650 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு 350 டன் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது. எஞ்சியுள்ள 300 டன் குப்பைகளில் 60 சதவீதம் (240 டன்) குப்பைகள் மறுசுழற்சி செய்யமுடியாத சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக், பாலிதீன் உள்ளிட்ட பொருட்கள் ஆகும். இது சுற்றுச்சூழலுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
திடக்கழிவு மேலாண்மையின் அடிப்படை குப்பை உருவாக்கும் இடத்திலேயே 100 சதவீதம் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க வேண்டும். இதற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் தொடக்கத்திலேயே வீடு வீடாக குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மொத்தமாக குப்பைகளை உருவாக்குபவர்கள் தங்கள் குப்பைகளை அவரவர் இடத்திலேயே தரம் பிரித்து அறிவியல் முறைப்படி உரமாகவும், பயோகேஸாவும் உற்பத்தி செய்ய வேண்டும். இல்லாவிடில் குப்பைக்கு பெரிய அளவில் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
மதுரை மாநகராட்சியில் மக்கும் குப்பைகள் அறிவியல் முறைப்படி 450 டன் திறன் உள்ள இயந்திரம் மூலம் நாள் ஒன்றுக்கு 30 டன் அளவிற்கு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் துப்புரவு பணியாளர்கள் சேகரிக்கும் விற்க கூடிய மக்காத குப்பைகள் துப்புரவு பணியாளருக்கு பயன்தரும் வகையில் அவரவர் மூலமாகவே விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மாநகராட்சியில் கடந்த 14 மாதத்தில் ஏறக்குறைய ரூ.1.50 கோடி அளவிற்கு விற்பனை செய்து துப்புரவு பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.