பார்சலை உரிய முகவரியில் சேர்க்கத்தவறிய கூரியர் நிறுவனம் ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், மதுரை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
பார்சலை உரிய முகவரியில் சேர்க்கத்தவறிய கூரியர் நிறுவனம் ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என மதுரை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை கே.கே.நகரை சேர்ந்தவர் சுதா. இவர் மதுரை நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
கடந்த 2008–ம் ஆண்டு என்னுடைய தாயார் வேலூரில் வசித்தார். அவருடைய முகவரிக்கு 3 சட்டை துணிகளை கூரியர் மூலமாக 9.10.2008 அன்று அனுப்பி வைத்தேன். அந்த சட்டைகளை எனக்கு தைத்து திருப்பி அனுப்பி வைக்குமாறு கூறியிருந்தேன். ஆனால் நான் அனுப்பிய பார்சல் அவருக்கு போய்ச் சேரவில்லை. இதுகுறித்து கூரியர் அலுவலகத்தில் கேட்டபோது, ‘ஓரிரு நாளில் சென்றுவிடும்’ என்றனர். மீண்டும் அந்த அலுவலகத்துக்கு சென்றுகேட்டபோது, அந்த பார்சல் என்ன ஆனது என்று தெரியவில்லை. புதிதாக துணிகளை கொடுங்கள் இந்த முறை கண்டிப்பாக சம்பந்தப்பட்ட முகவரிக்கு கொண்டு போய்ச்சேர்த்துவிடுகிறோம் என்று கூறினார்.
அப்படியானால் நான் அனுப்பிய பார்சல் என்ன ஆனது. அதை திருப்பி கொடுங்கள். இல்லையென்றால் அதற்கான தொகையை செலுத்துங்கள் என்று கேட்டேன். அதற்கு நான் செலுத்திய கட்டண ரசீதில், பார்சலில் உள்ள பொருள் காணாமல் போனால் நிறுவனம் பொறுப்பேற்காது. கட்டணம் மட்டும் திருப்பி செலுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளதாக கூறினார்கள். இதனால் எனக்கு கடும் மனஉளைச்சல் ஏற்பட்டது. எனவே என்னுடைய சட்டை துணிகளையும், மனஉளைச்சலுக்கு உரிய இழப்பீடும் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, மறைக்காமலை ஆகியோர் விசாரித்தனர். முடிவில், கட்டண ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு கீழ் மனுதாரரிடம் கையெழுத்து பெறவில்லை. எனவே நிபந்தனைகளுக்கு அவர் கட்டுப்படவில்லை. எனவே அவர் அனுப்பிய பார்சலை உரிய நபரிடம் சேர்க்காதது நிறுவனத்தின் சேவை குறைபாடு. எனவே மனுதாரர் அனுப்பிய சட்டை துணிக்கான தொகை ரூ.600–யும், மனஉளைச்சலுக்காக மனுதாரருக்கு ரூ.10 ஆயிரத்தையும் தனியார் கூரியர் நிறுவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.