கண்ணமங்கலம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலை மீட்பு 4 பேர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு


கண்ணமங்கலம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலை மீட்பு 4 பேர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 July 2018 4:45 AM IST (Updated: 16 July 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சிலை மீட்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

கண்ணமங்கலம்,


திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் சசிகுமார் நகரை சேர்ந்தவர் கோகுலன் (வயது 29). இவரது வீட்டில் ஐம்பொன் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாகவும், மேலும் அடிக்கடி அவரது வீட்டிற்கு மர்ம நபர்கள் வந்து செல்வதாகவும் காட்டுக்காநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் முனிவேலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னிக்கு தகவல் தெரிவித்தார்.

அவரது உத்தரவின் பேரில், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, விஜயகுமார் மற்றும் போலீசார் கோகுலனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.


பின்னர் கோகுலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின்படி நாகநதி ஆற்றின் புதரில் பதுக்கி வைத்திருந்த ஐம்பொன் அம்மன் சிலையை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இந்த சிலையின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும்.

இந்த சிலையை கூட்டாக சேர்ந்து விற்க முயன்றதாக கோகுலன் தெரிவித்தார். அதன் பேரில் கண்ணமங்கலத்தை சேர்ந்த அரிராஜா (26), வேலூர் நாகநதி கிராமத்தைச் சேர்ந்த திருமலை (27), அடுக்கம்பாறை இ.பி.காலனியை சேர்ந்த தினேஷ் (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதில் முக்கிய குற்றவாளியான கீழ்வல்லம் சக்திவேல் மற்றும் களம்பூரான்கொட்டாய் சிலம்பு ஆகிய 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பறிமுதல் செய்த சிலை புவனேஸ்வரி அம்மனாக இருக்கலாம் என்பதும், எங்கிருந்து திருடப்பட்டது அல்லது கடத்தப்பட்டது என்ற விவரம் சக்திவேல் பிடிபட்டால் மட்டுமே தெரியவரும். ஏனெனில் இந்த சிலை திருட்டு மற்றும் காணாமல் போனது சம்பந்தமாக எவ்வித புகாரும் இல்லை.

இந்த சிலை உயரம் 28 சென்டி மீட்டரும், 2¼ கிலோ எடையும் உள்ளது. தற்போது கைதானவர்கள் ஏற்கனவே வேறு ஏதேனும் வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சிலை கடத்தல் மற்றும் பதுக்கல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story