கரூர் நகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ


கரூர் நகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ
x
தினத்தந்தி 15 July 2018 10:30 PM GMT (Updated: 15 July 2018 8:01 PM GMT)

கரூர் நகராட்சி குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.

கரூர்,

கரூர் பாலம்மாள்புரத்தை அடுத்த வாங்கல்ரோட்டில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் நகராட்சியின் 48 வார்டுகளில் இருந்தும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து துப்புரவு பணியாளர்கள் மூலம் பெறப்படும் அந்த குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் குப்பை கிடங்கிலுள்ள குப்பையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. எனினும் மலைபோல் குப்பை குவிந்து கிடப்பதால் உடனடியாக இது பற்றி தெரியவில்லை. நேற்று காலை தான் குப்பைகள் கொழுந்து விட்டு எரிந்து கரும்புகை வெளியேறியது.

இதை கண்ட அங்கிருந்த பணியாளர்கள் இது குறித்து கரூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் விஜயகுமார் உள்பட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்து கொண்டிருந்த குப்பைகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். எனினும் தொடர்ந்து தீ பரவி கொண்டே இருந்ததால் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து குப்பைகளை கிளறி விட்டு அதன் மீது தண்ணீர் அடித்தனர். மூச்சு திணறும் வகையில் புகை வருவதை பொருட்படுத்தாமலும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் காலியாக, காலியாக அருகேயுள்ள கிணறுகளில் இருந்து எடுத்துவரப்பட்டது. சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக தீயை கட்டுப்படுத்தினர். எனினும் குப்பை கிடங்கிலிருந்து லேசான புகைச்சல் வந்து கொண்டு தான் இருக்கிறது.

இதற்கிடையே கரூர் நகராட்சி ஆணையர் அசோக் குமார் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, மர்ம நபர்கள் யாரேனும் சிகரெட்- பீடி உள்ளிட்டவற்றை குடித்து விட்டு குப்பையில் போட்டு சென்றதால் தீ பிடித்ததா? அல்லது தாழ்வாக செல்லும் மின்கம்பியில் தீப்பொறி கிளம்பி குப்பையில் விழுந்ததால் தீ பற்றியதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

கரூர் நகராட்சியில் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளை பிரித்தெடுத்து சாலை அமைத்தல், சிமெண்டு நிறுவனங்களுக்கு மூலப்பொருள் தயாரித்தல் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் உரங்களாக மாற்றப்பட்டு விற்கப்படுவதாக தெரிகிறது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக சேகரிக்கப்பட்ட குப்பைகள் தீக்கிரையாகியிருப்பது நகராட்சி நிர்வாகத்தின் குப்பை மேலாண்மை பணிக்கு தொய்வை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. எனவே குப்பை கிடங்கினை தீவிரமாக கண்காணித்து பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story