261 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.57¾ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்


261 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.57¾ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
x
தினத்தந்தி 16 July 2018 5:00 AM IST (Updated: 16 July 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

261 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.57 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.


வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு நலத்துறை சார்பில் இணை சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா ஸ்கூட்டர், வீட்டுமனை பட்டா மற்றும் கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், சு.ரவி, ஜி.லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு ரூ.57 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 261 பயனாளிகளுக்கு விலையில்லா ஸ்கூட்டர், வீட்டுமனை பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-


மாற்றுத்திறனாளிகளுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை தீட்டி, அதனை செயல்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்தியவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. ஏராளமான துறைகளில் மாற்றுத்திறனாளிகள் சாதித்து வருகின்றனர். அவர்களுக்கு உடலில் ஊனமே தவிர, மனதில் ஊனம் கிடையாது. தமிழக அரசு வேலை வாய்ப்பில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி உதவி வருகிறது. மேலும் திறன் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.1 கோடி வரை வங்கி கடனுதவி பெற்று, சுயமாக தொழில் செய்து வருகின்றனர். அவர்களின் குறைகளை தீர்க்க சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டு, குறைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் உருவாவதற்கு நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வது காரணமாகும். இதனை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், உதவி கலெக்டர் மேகராஜ், போலீஸ் சூப்பிரண்டு பகலவன், ஆவின் முன்னாள் தலைவர் வேலழகன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமு, தாசில்தார்கள் ஜெயந்தி, பாலாஜி, இளநிலை மறுவாழ்வு அலுவலர் மலர்விழி, முடநீக்கியல் நிபுணர்கள் பார்த்தசாரதி, ஜோதிலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story