மழை, காற்றினால் அறுந்து தரையில் கிடக்கும் மின்கம்பிகளை தொட வேண்டாம் மின்வாரிய அதிகாரி அறிவுரை


மழை, காற்றினால் அறுந்து தரையில் கிடக்கும் மின்கம்பிகளை தொட வேண்டாம் மின்வாரிய அதிகாரி அறிவுரை
x
தினத்தந்தி 16 July 2018 4:30 AM IST (Updated: 16 July 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

மழை, காற்றினால் அறுந்து தரையில் கிடக்கும் மின்கம்பிகளை தொட வேண்டாம் என்று மின்வாரிய அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலூர்,

கணியம்பாடி அருகே உள்ள நஞ்சுகொண்டாபுரத்தை சேர்ந்த ராஜவேலு மகன் இளவரசன் (வயது 15). 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்தான். கடந்த 10-ந் தேதி அதே கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் வழியாக இளவரசன் நடந்து சென்றான். அப்போது அங்கு மழையின்போது மரக்கிளைகள் விழுந்ததில் அறுந்து கிடந்த மின்கம்பியை இளவரசன் மிதித்து மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

இதேபோன்று வாணியம்பாடியை அடுத்த இந்திராநகரை சேர்ந்தவர் விவசாயி முருகன் (40) கடந்த 12-ந் தேதி நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவங்கள் எதிரொலியாக மழைக்காலங்களில் பொதுமக்கள் அறுந்து தரையில் கிடக்கும் மின்கம்பிகளை தொடாமல் விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட்டு மின்விபத்துகளை தவிர்க்குமாறு வேலூர் கோட்ட மின் செயற்பொறியாளர் ரா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


வேலூர் மின்பகிர்மான வட்டத்தில் உள்ள களப்பணியாளர்கள் மழை, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளின்போது துரிதமாகவும், உடனடியாகவும் நிவர்த்தி செய்யவும், எந்த நேரமும் முழுவீச்சில் செயல்படும் வகையில் வாகனங்கள் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின்தடை மற்றும் மின்சார பொருட்கள் சேதாரம் போன்ற புகார்களை தங்கள் பகுதிக்கு அருகே உள்ள பிரிவு அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.


மழை மற்றும் காற்றினால் அறுந்து தரையில் விழுந்து கிடக்கும் மேல்நிலை மின்கம்பிகள் அருகே பொதுமக்கள் செல்லக்கூடாது. அதேபோல் அதனை தொட வேண்டாம். மின்சார்ந்த பொருட்களில் தன்னிச்சையாக செயல்படாமல் மின்வாரிய பிரிவு அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உடனடியாக தகவல் தெரியப்படுத்த வேண்டும்.

இடி அல்லது மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர், தொலைபேசி, செல்போன் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்க வேண்டாம்.

ஈரமான கைகளுடன் மின் சுவிட்சுகள், பிளக்குகளை இயக்க கூடாது. மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். மழைகாலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு வெட்டிகள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம். மின்சாரத்தினால் ஏற்படும் தீயினை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டும். இடி, மின்னலின்போது மின்கம்பிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பிவேலி போன்றவற்றின் அருகே ஒதுங்குவதை தவிர்க்கவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story