சேலம் பசுமைவழி சாலை திட்டத்தை அரசியல் கட்சிகள் தான் எதிர்க்கின்றன ஜான்பாண்டியன் பேட்டி


சேலம் பசுமைவழி சாலை திட்டத்தை அரசியல் கட்சிகள் தான் எதிர்க்கின்றன ஜான்பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 16 July 2018 4:45 AM IST (Updated: 16 July 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

சேலம் பசுமை வழிசாலை திட்டத்தை அரசியல் கட்சிகள் தான் எதிர்க்கின்றன என்று தஞ்சையில் ஜான்பாண்டியன் கூறினார்.

தஞ்சாவூர்,

தேவேந்திர குல வேளாளர்கள், பட்டியல் இனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். மேலும் அவர்களை வேளாண்மை மரபினராக அறிவிக்க வேண்டும். தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியல் இனத்தில் இருந்து பெற்று வரும் நன்மைகளை விட இழந்த மாண்புகள் தான் அதிகம். அழிந்து வரும் விவசாயம் போல பாரம்பரிய வேளாண்குடிகளின் வேளாண்மை சார்ந்த அடையாளம் அழிந்து வருகிறது. எனவே வேளாண்மை சேர்ந்த சமூகமாக தனது அடையாளத்தை தக்க வைக்க தேவேந்திர குல மக்கள் விரும்புகிறார்கள். எனவே வேளாண் மரபினராக தனிப்பிரிவின் கீழ் தேவேந்திர குல மக்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தேர்தல் காலத்தில் தான் கூட்டணி குறித்து பேசுவோம். சேலம்- சென்னை பசுமை வழிசாலை திட்டத்தை மக்கள் எதிர்க்கவில்லை. அரசியல் கட்சிகள் தான் எதிர்க்கின்றன. இந்த திட்டத்தில் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட்டு அதற்கு ஏற்ப அரசு செயல்பட வேண்டும். இதில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரம் நிலைத்து நிற்கும் வகையில் அரசு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் சமூக விரோதிகள் யாரும் ஊடுருவவில்லை. சுப்ரீம் கோர்ட்டே உத்தரவிட்டாலும் ஆலையை திறக்க விடமாட்டோம். தமிழக அரசும் இதில் உறுதியாக இருக்கிறது. நியூட்ரினோ, மீத்தேன் உள்ளிட்ட தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை நாங்கள் எதிர்ப்போம். அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஆதரவளிக்கமாட்டோம். காவிரி நீர் பிரச்சினையில் முறையாக செயல்படாத கர்நாடகம் மீது சுப்ரீம் கோர்ட்டு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பொதுச்செயலாளர் பிரிசில்லாபாண்டியன், தஞ்சை மாவட்ட செயலாளர் தியாக.காமராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story