வாலிபர் கொடூரக்கொலை 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
திருப்பூரில் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அனுப்பர்பாளையம்,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அவினாசியில் இருந்து மங்கலம் செல்லும் சாலையில் வஞ்சிப்பாளையம் ரெயில்வே பாலம் அருகே 25 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பிணமாக கிடந்தவரின் உடலில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட காயம் இருந்தது.
ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இதையடுத்து அவருடைய சட்டை பையில் செல்போன் மூலம் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த புரோமோத் மாஞ்சில் (வயது 24) என்றும், வஞ்சிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், அவர் கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது மர்ம ஆசாமிகள் அவரை கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி சென்று இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து புரோமோத் மாஞ்சில் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். அப்போதுஅவர்கள் 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story